முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்..!
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
உள்ளூர் வீரர்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மாநில அளவிலான போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று (அக்.4ம் தேதி) தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி என 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறயுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என ஐந்து இடங்களில் மாநில அளவிலான இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 4 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த தொடக்க விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற இருக்கின்றன.
இதையடுத்து, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் மாவட்டத்திற்கு வழங்கப்படும் சாம்பியன் கோப்பையும் அறிமுகப்படுத்த இருக்கின்றது. கடந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு இணையாக அரசு நடத்தியது.ஆகையால், இந்த முறையும் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா அரங்கேறுகிறது.
குழு மற்றும் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், 2ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.75,000, 3ம் இடத்திற்கு ரூ.50,000ம் வழங்கப்படும். இதேபோல், குழு பிரிவில் முதலிடத்திற்கு கோப்பையுடன் ரூ. 75,000ம், 2ம் இடத்திற்கு ரூ.50,000ம், 3ஆம் இடத்திற்கு ரூ.25,000ம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.