கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்..!

 கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்..!

வாடகை பாக்கித் தொகை ரூ.780 கோடியை செலுத்தாததால் சென்னை ரேஸ் கிளப்பை கையகப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு, கடந்த 1945-ம் ஆண்டு 160 ஏக்கர் 86 சென்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகைக் காலம் வரும் 2044-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலத்தை குத்தகைக்கு விடும் போது ஆண்டுக்கு ரூ.614 மற்றும் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 1970-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி முதல் இந்த வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் – கிண்டி வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்தார்.

அதற்கு பதிலளித்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், வாடகையை உயர்த்துவது தொடர்பாக கடந்த 1945-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, 1970-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.780 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உள் வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருவதாகவும், நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தது.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நோட்டீசின்படி செலுத்த வேண்டிய ரூ.780.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று (செப். 9) சீல் வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...