வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கன மழைக்கு வாய்ப்பு..!
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, 9-ந்தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கு அடுத்த 3 முதல் 4 தினங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காளம் – வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவ வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களை பொறுத்தவரையில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு பதிவின் படி சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி டவுண் பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை அளவும் பதிவாகி இருக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 1 முதல் 4 சென்டி மீட்டர் வரையில் மழை பெய்துள்ளது.