விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சென்னையில் 1,519 சிலைகளை வைப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று வீடுகளில் பிளையாருக்கு சிறப்பு புஜைகள் நடத்தி வழிபடுகிறார்கள்.
விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்று. இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாகவிநாயகரின் பிறந்தநாளாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்
விநாயகர் சதுர்த்தி இன்று காலை முதலே உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவி இன்று பூஜைகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து பல அடி உயரம் வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. இந்த விநாயகர் சிலைகள் 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
இதையொட்டி விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகிறது வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள். இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட சிலைகள் தமிழ்நாடு முழுவதும் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
இதனிடையே சிலைகள் வைக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தீயணைப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் தேவை என்றும், போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்கள். இன்று தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான (10 அடிக்கு உட்பட்டது) விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,519 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிலை வைக்கப்படும் இடங்களில் 2 தன்னார்வலர்களை சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு போலீசார் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலைகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும் என்று விழாக்குழுவினரை போலீசார் வலியுறத்தியுள்ளனர்.
சென்னையில் நிறுவப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு வருகிற 11-ந்தேதியும் (புதன்கிழமை), 14-ந்தேதியும் (சனி) மற்றும் 15-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். சென்னையில் பொதுவாக விநாயகர் சிலை கரைப்பு என்பது ஞாயிறு அன்றுதான் நடைபெறும். பட்டினம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மிகவும் புகழ் பெற்றதாகும்.
கடந்த ஆண்டை போலவே பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, ஊர்வல பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் போலீசாரும், சென்னையில் 15 ஆயிரம் போலீசாரும் ஈடுபட உள்ளார்கள். சென்னையில் கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டதோ, அந்த இடங்களில் மட்டும்தான் இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.