முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம்..!

 முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம்..!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கம் நடத்திவந்த 11 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,  31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,  கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துகள் போராட்டத்துக்கு வழிவகுத்தது. எய்ம்ஸ் மற்றும் சஃப்தா்ஜங் உள்பட தில்லியின் பல மருத்துவமனைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம்(ஆர்டிஏ), டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனை ஆகியவை 11 நாட்கள் நடத்திவந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“நாட்டின் நலன் மற்றும் மருத்துவ சேவையைக் கருத்தில் கொண்டு, ஆர்டிஏ, எய்ம்ஸ் புது தில்லி, 11 நாட்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு சார்ந்த பிரச்னையை நிவர்த்தி செய்ததற்காக, உச்ச நீதிமன்றத்திற்கு எங்களது மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிரச்னைகளை சரிசெய்ய தேசிய பணிக் குழுவை நியமித்ததற்காக உச்ச நீதிமன்றத்தை பாராட்டுகிறோம். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு வழிகாட்டுதலை அமல்படுத்தும்வரை பணி நேரத்திற்குப் பிறகு எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...