வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்..!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26-ம் தேதி தொடங்கிய 33வது ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
இதனிடையே, நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று இறுதிச்சுற்றில் விளையாட இருந்த நிலையில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனவே இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன், இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு எனக்கு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. சவால்களை நேருக்கு நேர் சந்திப்பது உங்களின் இயல்பு என்பது எனக்கு தெரியும். வலுவாக மீண்டு வாருங்கள். உங்களுக்காக அனைவரும் காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி முதல்கட்ட தகவல்களை கேட்டறிந்ததாகவும், வினேஷ் போகத் தகுதிநீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.