முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாளில் பேரணிக்கு முதல்வர் அழைப்பு..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளில் நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7 ஆம் தேதி கடைபிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“கடல் அலையிலும், நினைவலையிலும் நிரந்தரமாக வாழும் தலைவர் கருணாநிதி!நம் உயிருடன் கலந்த தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்களில் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆறாவது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ஆம் நாள். ஆறாத வடுவாக நம் இதயத்தைக் கீறிக் கொண்டிருக்கிறது அவர் நம்மை விட்டுப் பிரிந்த அந்த வேதனை மிகுந்த நாள். இயற்கையின் விதி எந்த உயிரினத்தையும் புவி மீது நிரந்தரமாக விட்டுவைப்பதில்லை என்கிற உண்மையை உள்ளம் உணர்ந்திருந்தாலும், நம் உயிரினும் மேலான ஒப்பற்ற தலைவரை இழந்திட எப்படி சம்மதிக்கும் நமது இதயம்?
ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பாதுகாவலராக, நவீனத் தமிழ்நாட்டைத் தட்டித் தட்டிச் செதுக்கிய சிற்பியாக, தமிழைத் திறம்படக் கையாண்ட படைப்பாளராக, செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த தமிழினப் போராளியாக, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு பொழுதையும் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு மேன்மைக்காக அர்ப்பணித்து அயராது உழைத்த ஓய்வறியாத சூரியனாம் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி இப்போதும் நம் இதயத் துடிப்பாக இருக்கிறார்.
ஒவ்வொரு செயலிலும் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தொலைநோக்குப் பார்வையுடன் அவர் உருவாக்கிய திட்டங்களும், நிலைநிறுத்திய திராவிடக் கொள்கைகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. இந்திய ஒன்றியம் முழுமைக்கும் வழிகாட்டும் மனிதநேயத் தத்துவமாகத் திகழ்கின்றன. ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தின் வண்ணமிகு திறப்பு விழாவில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களில் ஒருவனான நான் பங்கேற்றேன். உங்களைப் போலவே நானும் அந்த மேம்பாலத்தைப் பயன்படுத்துகிற பயனாளிதான். அந்தப் பயன் நமக்கு கிடைக்கச் செய்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி!
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் எதிர்காலப் போக்குவரத்து நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு, அதன் இதயப் பகுதியான அண்ணா சாலையில் எப்படிப்பட்ட கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, 1973-ஆம் ஆண்டில், முதல் grade seperator என்ற பெருமைக்குரிய அண்ணா மேம்பாலத்தைக் கட்டியவர் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி.
போக்குவரத்து நெருக்கடியால் சென்னை மூச்சு திணறாமல் இருப்பதற்காக, அரை நூற்றாண்டுக்கு முன் அண்ணா மேம்பாலத்தைக் கட்டிய ஆருயிர்த் தலைவர் கருணாநிதிதான், வாகனங்களின் பெருக்கத்தைக் கவனித்து, அதே அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் 2010-ஆம் ஆண்டில் தலைநகரத்தின் பசுமை நுரையீரலைப் போன்ற செம்மொழிப் பூங்காவை உருவாக்கினார். மக்களின் வாழ்க்கைத் தேவைக்கானக் கட்டமைப்புகளைக் காலத்திற்கேற்ற சூழலியல் பார்வையுடன் உருவாக்கிய சிந்தனையாளர்.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் கருப்பொருளாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளை, திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் குரலாக முன்னெடுத்தவரும் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதிதான். மனித சமுதாயத்தில் ஓர் உயிர்கூட பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரிக்கப்பட்டு, தனது அடிப்படை உரிமைகளைக் காலம்காலமாகப் பறிகொடுத்துக் கொண்டே இருக்கக்கூடாது என்பதே சமூகநீதியின் அடிப்படைக் கொள்கை. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், ஐந்து முறை தனக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கியபோதெல்லாம் சமூகநீதிக் கொள்கையை இடஒதுக்கீட்டின் மூலம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றியவர்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் என அனைத்துத் தரப்பினரின் உரிமைகளையும் சமூகநீதிக் கொள்கை வழியாக நிலைநாட்டி, தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவினை இன்றுள்ள 69 விழுக்காட்டிற்கு உயர்த்தி வைத்தவரும் அவர்தான். பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18% என உயர்த்தியவரும் அவர்தான். அதில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு உரிய அளவில் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியவரும் அவரேதான்.
அருந்ததியர் சமுதாயத்தினரின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அந்த உள்ஒதுக்கீட்டு மசோதாவை 2009-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழியும் வாய்ப்பைப் பெற்றது, அன்று துணை முதலமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான்தான் என்பதில் இன்றைய கழகத் தலைவராகவும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்கிறேன். அந்த உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில், அருந்ததியர் சமுதாயத்து மாணவி மருத்துவம் படிப்பதற்கான ஆணையையும் வழங்கி மகிழ்ந்தது மறக்க முடியாத நினைவு.
சிறுபான்மைச் சமுதாயத்தினரான முஸ்லிம்களுக்கு 3.5% தனி இடஒதுக்கீட்டிலும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கான 3% உள்ஒதுக்கீட்டிலும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில், உரிய தரவுகளுடனும், தெளிவான சட்டப்பார்வையுடனும், சமூகநீதியில் உண்மையான அக்கறையுடனும் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்டவை என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்டோர் – ஒதுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடியவர். அவர்களின் உரிமைககளைச் சட்ட வழியில் நிலை நிறுத்தியவர். பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு இடஒதுக்கீடு, திருநங்கையருக்கான அங்கீகாரம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், பிச்சைக்காரர்கள் , தொழுநோயாளர்களுக்கு மறுவாழ்வு எனத் தமிழ் மண்ணில் வாழும் அத்தனை மனிதர்களுக்குமான உரிமைகளையும் வழங்கி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அடித்தளமிட்ட தாயுள்ளம் கொண்ட தலைவரன்றோ!
சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில், இந்தியாவில் வாழும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்குத் தூண்டுகோலாகவும், அதனால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளில் துணை நின்ற தோழராகவும் விளங்கியவர் நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி. குடிசை மாற்று வாரியம் தொடங்கி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணம் வரை இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தியவரும் அவர்தான்.
நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவராக, 13 தேர்தல் களங்களிலும் தோல்வியைப் புறமுதுகிடச் செய்து வெற்றி பெற்ற ஒரே தலைவரான நம் உயிர்நிகர் தலைவர் காட்டிய வழியில், உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு, மக்களின் நலன் காக்கும் ஆட்சியை வழங்கி வருகிறது. அந்த நல்லாட்சிக்கு நற்சான்றிதழாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற மக்கதான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் குரலும், தோழமைக் கட்சியினரின் குரலும் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக முழக்கங்களாக ஓங்கி ஒலிக்கின்றன. இந்திய மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டும் குரல்களாக, ஒலிக்கின்றன.
மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளால் தமிழ்நாட்டிற்குரிய நிதியும், திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டாலும், நம்மை எந்நாளும் இயக்கும் நம் உயிர்நிகர்த் தலைவர் கருணாநிதியிடம் கற்றுக்கொண்ட அரசியல் – நிர்வாகத் திறனால் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி நல்லாட்சியை வழங்கி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
பொதுமக்களின் பேராதரவைப் பெற்றுள்ள நம் அரசுக்கு எதிராக அரசியல் எதிரிகள் திட்டமிட்டுப் பரப்ப முயற்சிக்கும் அவதூறுகள் ஈசல் பூச்சிகளைப் போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன. உண்மையான அக்கறையுடன் நாம் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய லட்சியப் பயணம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். அதற்குப் பெரியார் – அண்ணா – கருணாநிதி வளர்த்தெடுத்த திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கைகள் என்றென்றும் துணை நிற்கும்.
நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் உயிர்நிகர்த் தலைவர் கருணாநிதியின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.
கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம். எதையும் தாங்கும் இதயம் கொண்ட தன் அண்ணன் அருகில் ஓய்வு கொள்ளும் ஓயாத உழைப்பாளியாம், தலைவர் கருணாநிதியின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது.
தலைவரின் வரலாற்றையும் ஒரு நூற்றாண்டுகால தமிழ்நாட்டின் வரலாற்றையும் விளக்கும் வகையிலான அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்‘ எனும் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய பேரறிஞர் அண்ணா – கருணாநிதியின் நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்தை இந்தக் குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சமாகும். தங்கள் தலைமுறையை வாழவைத்த தலைவருக்குத் தமிழர்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கை இது.
நம் உயிர் நிகர்த் தலைவருக்கு நாமும் நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துங்கள். திமுகவினர் அவரவர் வீடுகளில் தலைவர் கருணாநிதிக்கு நன்றியை செலுத்துங்கள். என்றென்றும் அவர் நம் உள்ளத்திற்குத் தரும் உத்வேகத்துடன் நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம். மக்கள் பணியாற்றித் தொடர் வெற்றிகளைக் குவிப்போம்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.