தமிழ்நாட்டுக்கு 2 லட்சம் கன அடிநீரை திறக்கும் கர்நாடகா..!
கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு 2 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்ட நிலையிலும் தென்மேற்கு பருவமழை இடைவிடாது கொட்டி வருவதால் அணைகளுக்கு வரும் நீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிட முடிவு செய்துள்ளதாம் கர்நாடகா
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை ஆறான கபிலா நதி நீர்ப்பிடிப்புகளில் ஒரு மாத காலமாக இடைவிடாமல் பெருமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் கர்நாடகாவும் கேரளாவும் பெருமழை, வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. ஆனாலும் பெருமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்), கபினி அணைகளுக்கான நீர்வரத்து காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் எல்லையான ஒகேனக்கல் மிகப் பெரும் வெள்ள அபாயத்தை சந்திக்க இருக்கிறது.
மேலும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. தற்போது 118 அடியை தாண்டியிருக்கிறது அணை நீர் மட்டம். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. இன்று கால்வாய் பாசனத்துக்கும் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் அணையில் இருந்து வினாடிக்கு 75,000 கன அடி முதல் 1.25 லட்சம் கன அடிநீர் வரை திறக்க வாய்ப்புள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் கரையோரத்தின் 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர்.