ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 72,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கடந்த வாரம் 75,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகா- தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 25,000 கனடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 30,000 கனடியாக அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 72,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் கர்நாடக அணைகள் முழுமையாக நிரம்பி விட்டதால் நீர்வரத்து பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11-வது நாளாக நீடிக்கிறது.