ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கமாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்க கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

 ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கமாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்க கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, சான்றிதழ் மறுக்க கூடாது எனவும், சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.

மாற்று சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்று சான்றிதழ் வழங்கும்போது கட்டண பாக்கி உள்ளது என்றோ, கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாற்று சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்வதற்கான ஒரு ஆவணமே தவிர, பெற்றோர்களிடமிருந்து கட்டணம் பாக்கியை வசூலிக்க கூடிய கருவி அல்ல எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இதுசம்பந்தமான விதிகளை மூன்று மாதங்களில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளி கல்வித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மாற்றுச்சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதனை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...