நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா
நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா
“கல்வி பெரியதொரு சக்தின்னு புரிஞ்சிக்கிட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கத் தொடங்கினேன். இன்றைக்கு என்னை பார்த்து எனது சமூகத்தை சேர்ந்த பல பேர் பேர் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் இளம்பெண் கௌசல்யா.செவிலியராக பணிபுரிய மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய கல்லுரிப் படிப்பில் கடைசி ஆண்டு படித்து வருகிறார் கௌசல்யா.என்ன இது? மேல் நிலைப் பள்ளிப்படிப்புக்கு பிறகு பலரும் கற்கும் வழக்கமான படிப்புதானே? இதிலென்ன சிறப்பு இருக்கிறது? என்று பலருக்கும் தோன்றலாம்.ஆனால், ஊசி, மணி, பாசியை தெருக்களில் விற்பனை செய்து, நாடோடிகளாக வாழ்ந்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், அதுவும் ஒரு பெண் இத்தகைய நிலைக்கு உயர்ந்திருப்பதால், கௌசல்யா கவனம் பெற்று வருகிறார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலைய சுற்றுச்சுவர் ஓரத்தில், ஒதுக்குப்புறமாக எவ்வித போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் அமைந்திருக்கிறது கௌசல்யாவின் குடியிருப்பு. இங்கு வாழ்ந்து வரும் சுமார் நூறு நரிக்குறவர் குடும்பங்களில் ராஜேந்திரன், வசந்தி தம்பதியருக்கு பிறந்த எட்டு (ஏழு பெண்கள், ஓர் ஆண்) குழந்தைகளில் ஒருவர்தான் கௌசல்யா.