டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்..!

 டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்..!

சென்னை தண்டையார் பேட்டை இந்தியன் ஆயில் முனையத்தில் இருந்து இயங்கும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் இன்று திடீர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். 300க்கும் அதிகமான லாரிகள் இயங்காத நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல்கள் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தண்டையார் பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல், டீசல் முனையம் அமைந்துள்ளது.இந்த முனையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் முனையத்தில் இயங்கும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஸ்ட்ரைக் என்பது டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இன்று காலை முதல் 300க்கும் அதிகமான டேங்கர் லாரிகள் இயங்கவில்லை.

இதனால் சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கான பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் பணி தடைப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட இந்த 7 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் ஸ்டிரைக்கின் பின்னணி பற்றி கேட்டபோது லாரி உரிமையாளர்கள் தரப்பில் முக்கிய விஷயத்தை கூறினார்கள். அதாவது ‛‛இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மிகவும் கடினமாகவும், சர்வாதிகாரமாகவும் செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டால் அதனை காரணம் காட்டி டேங்கர் லாரிகளின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கூறுகின்றனர்.

இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மனஉளைச்சலை சந்திக்கின்றனர். அதுமட்டுமின்றி பணஇழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த பேச்சுவார்த்தை என்பது தோல்வியடைந்தது. இதனால் இன்று ஒருநாள் டேங்கர் லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்” என கூறியுள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...