தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் ஜூலை 14ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்):
தமிழகத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 70 மி.மீ. மழை பதிவானது. ஆவடி (திருவள்ளூர்) – 60, வால்பாறை (கோவை), சின்னக்கல்லார் (கோவை) தலா 50மிமீ மழை பதிவானது.
சென்னையில் நேற்று காலை வரை சோழிங்கநல்லூரில் 50 மி.மீ., கோடம்பாக்கம், அம்பத்தூர், பெருங்குடி, பள்ளிக்கரணை, தேனாம்பேட்டை, மீனம்பாக்கம், ஆலந்தூர், சென்னை விமானநிலையம், மணலி, நந்தனம், வானகரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில், வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 9-12) வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.