‘நீட் தேர்வை ரத்து’ -தமிழ்நாடு அரசின் முடிவைவரவேற்கிறேன் -தவெக தலைவர் விஜய்..!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் நடத்தப்படும் கல்வி விருது இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பின்னணியில் ஒலிக்க கையை அசைத்தபடி நடிகர் விஜய் மேடை ஏறினார். சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு காலை உணவும், விஜய்யின் படம் அச்சிடப்பட்ட பையில் பிஸ்கெட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து, மதிய விருந்துக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “இளம் சாதனையாளர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், தவெக தோழர்களுக்கும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
நீட் குறித்து பேசவில்லை எனில் அது சரியாக இருக்காது. நீட் தேர்வால் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் குறிப்பாக கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது. 1975க்கு முன் கல்வி மாநில பட்டியலில் இருந்தது. பின்னர் ஒன்றிய அரசு கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றது. இதுதான் முதல் பிரச்னையாக தொடங்கியது.
இரண்டாவதாக ஒரே நாடு, ஒரே பாடத் திட்டங்கள், ஒரே தேர்வு.. பன்முகத்தன்மை ஒரு பலமே தவிர, பலவீனம் ஆகாது. மாநில மொழியில் படித்து, NCERT பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி சமாளிப்பார்கள்..
நீட் தேர்வில் ஏற்பட்ட குழறுபடிகளால் மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை கலைந்து விட்டது. நீட் விலக்கே இதற்கு ஒரே தீர்வு. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” இவ்வாறு பேசினார்.
முதல்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது, தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை என்றும், நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நடிகர் விஜய் பேசியிருந்தார்.