குவைத் தீ விபத்து – 43 இந்தியர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!
குவைத்தின் மங்காப் நகரில் இந்தியர்கள் பங்குதாரர்களாக உள்ளன என்பிடிசி குழுமத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு என்பது உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான இந்தியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதாவது இந்தியாவில் இருந்து குவைத்தின் மங்காப் நகருக்கு வேலை தேடி சென்ற இந்தியர்கள் இந்த குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 195 பேர் வரை இந்த குடியிருப்பில் தங்கியிருந்தாத கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென்று அந்த குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள சமையலறையில் திடீரென்று தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென பரவி உள்ளது. இதனால் குடியிருப்பில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகாலை நேரம் என்பதால் பலரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு தீவிபத்து ஏற்பட்டது தெரியவில்லை.
மேலும் புகை மூட்டம் அதிகரித்த நிலையில் அங்கு தூங்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்விழித்து பார்த்தபோது தான் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பலரால் கட்டடத்தில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தாங்கள் தங்கியிருந்த கட்டத்தில் இருந்து வெளியே குதித்த நிலையில் 49 பேர் வரை தீயில் சிக்கி உடல் கருகி பலியாகினர்.
மேலும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் பலியானவர்களில் இந்தியர்கள் மட்டும் 43 பேர் என்று சொல்லப்படுகிறது. இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது. இவர்களின் உடல்கள் முற்றிலுமாக எரிந்துள்ளதால் பலியானவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீவிபத்து பற்றி அறிந்தவுடன் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இன்று காலையில் குவைத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கேவி சிங் சென்றார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக வேண்டிக்கொள்வதாக அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.