தமிழறிஞர் .மு.சி.பூர்ணலிங்கம் நினைவு நாள் இன்று:
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்த தமிழறிஞர் .மு.சி.பூர்ணலிங்கம் நினைவு நாள் இன்று:
(25.05.1866–06.06.1947)
பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டினருக்கும் அறிமுகப்படுத்திய
மாபெரும் தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கமாவார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியபோது “ஞான போதினி” என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் “நீதி” என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.
பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.
தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.
திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியா” என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக “தமிழ் இலக்கிய வரலாறு” என்ற ஆங்கில நூலை எழுதினார்.
இவர் எழுதிய, இராவணப் பெரியோன், சூரபதுமன் வரலாறு ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை.
இளங்கோ