மும்பை: இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 1-ம் தேதி மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதையடுத்து வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பங்குச் சந்தை வேலை செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உயர்த்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையடுத்து இந்திய பங்குச் சந்தைகள் மளமளவென வீழ்ச்சி அடைந்தன. சென்செக்ஸ் 1,546.84 புள்ளிகள் (1.88%) சரிந்து 80,722.94 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 495.20 புள்ளிகள் (1.96%) வீழ்ச்சியடைந்து 24,825.45 புள்ளிகளில் நிலை கொண்டது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினம் மட்டும் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா மீதான வர்த்தக வரியை 18 சதவீதமாக குறைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் திடீரென அறிவித்தார். இது பங்குச் சந்தையில் நேற்று எதிரொலித்தது. பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று காலை தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 4,205 புள்ளிகளுக்கு மேல் (5%) உயர்ந்து 85,872 புள்ளிகளை எட்டியது. பின்னர் சற்று குறைந்து வர்த்தகமானது. இறுதியில், 2,073 புள்ளிகள் உயர்ந்து 83,739-ல் நிலை பெற்றது. இதுபோல நிப்டி 1,250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வர்த்தக இறுதியில் 639 புள்ளிகள் உயர்ந்து 25,727-ல் நிறைவடைந்தது. இது 2.55 சதவீத உயர்வு ஆகும்.
நேற்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான பங்குகள் உயர்வுடன் முடிந்தன. இதுபோல நடுத்தர மற்றும் சிறு நிறுவன குறியீடுகள் உயர்வுடன் முடிந்தன. ஜவுளி, தோல், ஜெம் அன்ட் ஜுவல்லரி, கடல் உணவு ஏற்றுமதி, சிறப்பு ரசாயனம் தொடர்பான நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
நிப்டி-50-ல் இடம்பெற்றுள்ளவற்றில் அதிகபட்சமாக அதானி என்டர்பிரைசஸ் பங்கு 10.5% உயர்ந்தது. அதானி போர்ட்ஸ் 9.1%, பஜாஜ் பைனான்ஸ் 6.6%, இண்டிகோ 5.57% உயர்ந்தது. டெக் மஹிந்திரா, பாரத் எலெக்ட்ரானிஸ் பங்குகள் மட்டும் சிறிய சரிவுடன் முடிந்தன. பங்குச் சந்தை உயர்வு காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் கோடி அதிகரித்தது.
இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வலுவடைந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு ஆகிய காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று அதிக உயர்வைச் சந்தித்தன. இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை மீண்டும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங், ஐரோப்பா, அமெரிக்க பங்குச் சந்தைகளும் நேற்று ஏற்றத்துடன் முடிந்தன.
பிரதமர் மோடிக்கு என்டிஏ தலைவர்கள் பாராட்டு: தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறியதாவது:

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும் மக்களிடத்திலும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் விரிவாக ஆலோசனை வழங்கினார். ஒவ்வொரு தேர்தலிலும் என்டிஏ தலைவர்கள், எம்.பி.க்கள் சிறப்பாக பணியாற்றுவதால்தான் வெற்றி கிடைக்கிறது. களத்தில் மக்களோடு இணைந்து தொடர்ந்து பணியாற்றுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
மக்களுடன் தொடர்புள்ள, நட்பு ரீதியிலான கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் என்டிஏ கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் இருந்து சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் என்டிஏ வெற்றி பெற்றதால் என்டிஏ தலைவர்கள் திருப்தி அடையக் கூடாது. மக்களுக்கு தொடர்ந்து நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுவரை 39 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அத்தனை நாடுகளும் வளர்ந்த நாடுகள். இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. அதற்காக அவருக்கு என்டிஏ கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா மீதான வர்த்தக வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்துள்ளார். இதற்கான அனைத்து பாராட்டும் பிரதமர் மோடியைச் சேரும். இவ்வாறு கிரண் ரிஜுஜு கூறினார்.
