முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு..!
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. மொத்தம் 152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி நீர் தேக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14,700 ஏக்கர் ஆயக்கட்டு பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக இந்த 14,707 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளிலும் இரு போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது . ஆண்டுதோறும் ஜூன் 1 – ஆம் தேதி, முதல் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர், ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு முதல் போகத்திற்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீர் என, மொத்தம் 300 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை முதல் 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.