ஜரீனாவின் சப்பரம் – 3 – சுப்ரஜா

 ஜரீனாவின் சப்பரம் – 3 – சுப்ரஜா
சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.
“அப்படியெல்லாம் இல்ல போகலாம்”
கால் ஊன்றி பின்னால் கேரியரில் ஏறி உட்கார்ந்தாள். பெடலை மிதிக்க ஆரம்பித்தான். மனதுக்குள் ஒரு சந்தோஷம்.
“ஜரீனா..?”
“ம்..முதல்ல சைக்கிளை பார்த்து ஓட்டுங்க ..என்ன கொண்டு வயல்ல சாய்ச்சுபுடாதீங்க..?”
“அட என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“நம்பிக்கை இல்லாம ஏறுவேனா?”
மனசுக்குப் பிடித்தப் பெண்ணை சைக்கிளில் உட்கார வைத்து மிதித்தபடியே பேசிகொண்டு வருவது ஒரு ஜிலீர் சுகம்தான். கொஞ்சம் வேகமாய் மிதித்தான்.
“மெல்ல போங்க..”
“ஏன் வேகமாப் போனா பயமா இருக்கா? பயமா இருந்தா சீட்டுக்கடியில் பிடிச்சுக்க …. இல்ல என்னை பிடிச்சிக்க….”
“இந்த ஆம்பிள்ளைங்க எல்லாத்திலயும் வேகம்தான்..ஒண்ணுமேலே ஓண்ணு வச்சு பேசுவாங்க “
“என்ன பேசிட்டேன்…நானும் பஷீரும் எவ்வளவு வேகமா போவோம் தெரியுமா..பஷீர் ஜம்முன்னு என் தோளை பிடிச்சுட்டு வருவான்..அவன் ஓட்டினால் நான் தோளைப் பிடிச்சிட்டு போவேன்..நாங்க போகாத ஊரா..இந்தப் பக்கம் தஞ்சாவூர் வரைக்கும் சைக்கிள்ல்லயே போவோம்..அந்தப் பக்கம் மாயவரம் வரைக்கும் கூட சைக்கிள்லயே போயிடுவோம்..””
“சைக்கிளை லாரி மேல தூக்கிப் போட்டு போவீங்களா?”
“கொழுப்பா?”
“ஆமாம்..சரி பார்த்து ஓட்டுங்க..இப்ப எங்க போயிட்டு இருக்கோம்ன்னு ஞாபகம் இருக்கு இல்ல..ஏதோ ஞாபகத்துல அப்படியே மெட்ராஸுக்கு ஓட்டிட்டு போயிடப் போறீங்க”
“ஏன் அப்படியே போயிட்டாத்தான் என்ன?”
“ம்..அம்மா தேடுவாங்க..”
“அப்ப உனக்கு பயம் இல்ல..”
“சும்மா ரோட்டைப் பார்த்து ஓட்டுகங்க..” அவனது இடுப்பில் குத்தினாள்.
துர்க்கைக் கோவிலில் கூட்டம் இல்லை. டூரிஸ்டுக் காரர்கள் கொஞ்சம் இருந்தார்கள். ஆர்த்தியும் ஜரீனாவும் ஆளுக்கொரு எலுமிச்சம்பழ மாலை வாங்கி துர்க்கைக்கு சாற்றினார்கள். உள்ளே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்கள் திரும்பும் போது ஆர்த்தி ஜரீனாவை அவன் சைக்கிளிலேயே உட்காரச் சொல்லி விட்டாள். கிளம்பும் போது சிவா கேட்டான்.
“ஜரீனா பின்னால் உட்கார்ந்து வந்தாள்.
காதல், நிறைய தருணங்களில் சொல்லாமலேயே வந்து விடுகிறது.
சிவாவுக்கும் அப்படித்தான்.கோவிலுக்கு போகும்போது ‘அப்படியே மெட்ராஸ் போயிடப் போறீங்க’என்றது நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே அப்படியே போயிடலாம் என்று கூட தோன்றியது.
“ஜரீனா..”
பின்புறம் இருந்து பதில் இல்லை. மெல்ல கழுத்தைத் திருப்பிப் பார்த்தான்.பின்னால் தான் இருந்தாள்.பெரிய கண்களால் குறும்புடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.
“என்ன பயந்துட்டீங்களா?”
“இல்லியே..ஏன்?” – சைக்கிளைத் தொடர்ந்து மிதித்துக் கொண்டே கேட்டான்.
“பின்னால் ஆள் இருக்கா இல்லையான்னு மிதிக்கறவங்களுக்குத் தெரியாதா.. தூங்கிட்டியோன்னு பார்த்தேன்…”
“சரிதான்..”
“ஜரீனா உனக்கு ரொம்ப பிடிச்சது என்ன?”
“எனக்குப் பிடிச்சுதா?”
“ம்..”
“என்ன யோசிக்கிறியா?”
“இல்ல”
“பின்ன சொல்ல வேண்டியதுதானே”
“நீங்க கேட்டா சிரிப்பீங்களோன்னு தோணுது..”
“ அதெல்லாம் சிரிக்க மாட்டேன் சொல்லு..”
“சப்பரம்..பெரிய சப்பரம்.. ஆள் உயர சப்பரம் ஒண்ணு இழுத்துட்டுப் போகணும்..”
“சப்பரம்ன்னா அவ்வளவு ஆசையா உனக்கு?”
“சப்பரம் இழுக்கும்போதெல்லாம் சந்தோஷமா இருக்கும் தெரியுமா.. தடதடன்னு அதை இழுத்துட்டு அது ‘மட்மட்’டுன்னு சத்தம் எழுப்பிக் கிட்டு உயிர் உள்ளவஸ்து மாதிரி நம்ம கூட ஓடி வரும் போது உள்ளுக்குள்ளே ஒரு மகிஷ்ச்சி..பொங்கும்..சின்ன வயசில எத்தனை வாட்டி செஞ்சி கொடுத்திருக்கீங்க… என்னால மறக்க முடியுமா..” வெகுளியாய் சொன்னாள்.
ஜரீனாவின் வீட்டில் அவளை இறக்கி விட்டாள். அவளுக்கு முன்னாலேயே ஆர்த்தி நின்றிருந்தாள்.
“ஆர்த்தி நீ கிளம்பறா இருந்தா கிளம்பு ..நான் பாஸ்கரைப் பார்த்துட்டு வர்றேன்..”
ஆர்த்தி உடனே கிளம்பி விட்டாள். ஜரீனா உள்ளே போக மனம் இல்லாமல் அங்கேயே நின்று இருந்தாள். வாசலில் அரவம் கேட்டு வெளியில் வந்தாள் ஜரீனாவின் அம்மா. அவர்களைப் பார்த்ததும்.”என்ன தம்பி வெளியே நின்னு பேசிட்டு..உள்ளே வா…”என்றாள்.
“இல்ல கிளம்பணும்”
“உள்ள வா தம்பி,டீத் தண்ணி போட்டுத் தர்றேன்… குடிச்சிட்டுப் போவியாம்?
கறிக் கடைக் காரன் அவர்களைக் கடந்து போனான்.
“இன்னைக்குள்ளே இந்த புடவையை முடிச்சுட்டா, அறுத்து நாளைக்கு எடுத்துடலாம்..”
தறியை திரும்பிப் பார்த்தவனுக்கு திடிர் என் அந்த ஆசை வந்தது.
“ஜரீனா நீ மேடையில உட்காருவியா?”
“ஏன் மேடையில் உட்கார்ந்து நெய்யவா?”
“எனக்கு சிகடா போடணும் போல ஆசையா இருக்கு…”என்றாள் குழந்தையாய்.
“சும்மா பேசிக்கிட்டு இருங்க..நான் டீ போட்டுக் கொண்டு வர்றேன்..”
ஜரீனா அவன் கண்களில் மின்னிய ஆர்வத்தையும்,ஆசையையும் பார்த்தாள்.
“கொஞ்ச நேரம் நெய்யலாம்,ஆனால் பக்கத்தில் உட்கார்ந்து சிகடா போட்டுட்டு
காசு கேட்கக் கூடாது…”
“அடி என்னடி..தம்பிய சும்மா சீண்டறே..” அம்மாக்காரி.”
“காசு கேட்க மாட்டேன்..”
தறி மேடையில் ஏறி உட்கார்ந்தார்கள்.
கீழே மிதித்து,பாவு பிளந்து உள்ளே சிகடா ராக்கெட்டைத் தள்ளி விட்டாள். பிடித்தவள் வெளியே எடுத்து மறுபடியும் பாவு பின்னல் மாற்றக் காத்திருந்து உள் தள்ளினாள். விளையாட்டுப் போல் நெய்தல் தொடர்ந்தது. அவள் வேகத்தைக் கூட்ட கொஞ்சம் திணறினாள். 
அதை ரசித்தாள்.
அவள் வேகத்திற்கு சிகடா ராக்கெட்டை அவன் உள் தள்ள பாவு பின்னல் பிளந்து மேலே வந்தது. சிகடா ராக்கெட் வேகமாய் மேலே பாய,அதன் கூர் அவளைக் குத்திவிடப் போகிறது என்று பயந்து பிடிக்க முயன்றான்.
அது அவள் மார்பில் குத்தி மடியில் தஞ்சமாக,சட்டென்று மார்பு தொட்ட கை மடி இறங்கியது. அவள் கைகள் மேல் அவன் கைகள்,விரல்கள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டன.
அம்மாக்காரி அடுப்பில் கவனமாய் இருந்தாள்.அவள் கைகளை அவனும் விலக்கவில்லை. அவளின் விரல்களும் அவன் விரல்களைப் பற்றி கொண்டன். குட்டிப் பாம்புகள் போல் ஒன்றொடொன்று பிணைந்தன. ஒவ்வொரு விரல்களும் தனித்தனி உயிர்களாய்த் தவித்தன.
ஒரு நிமிடம்..கொத்த வந்த பாம்பு போல் பற்றிக்கொண்ட விரல்களை இரண்டு பேருமே விலக்காமல் இருந்தார்கள்.இருவரின் விரல்களிலும் வெப்பக் கூத்து.
‘டீ ரெடி..” – கைகள் விலகின.
மேடையை விட்டு இறங்கினார்கள்.
டீயை வாங்கிக் குடித்தான். மௌனமாய், ஜரீனா ஒரு மூலையில் நின்று டீயைக் குடித்தாலும் பார்வை என்னவோ அவன் மேலேயே கொத்தி இருந்தது.
“என்னைக்கு தம்பி கிளம்பற?”
“ஆடிபெருக்கு முடிஞ்சாதான் போவேன்”
பாஸ்கரிடம் சொன்னபோது சிரித்தான்.
“என்னடா விளையாடறியா….சப்பரம் இழுக்கிற வயசா..?”
“எனக்கு இல்ல பாஸ்கர்..நம்ப ஏரியாவிலேயே யாரும் இதுவரைக்கும் இழுக்காத சப்பரமா இருக்கணும்..” – சிவாவின் கண்களில் ஆவல் மின்னியதைப் பார்த்தான் பாஸ்கர்.
பாகம் 1  |  பாகம் 2 பாகம் 3  |  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...