நாளை அக்னி நட்சத்திரம் – தொடங்குகிறது கத்தரி வெயில்..!

 நாளை அக்னி நட்சத்திரம் – தொடங்குகிறது கத்தரி வெயில்..!

இப்பவே மிரட்டி கொண்டிருக்கிறது வெயில்.. ஆனால், நாளை முதல்தான் கத்தரி வெயிலே துவங்க போகிறது.. இதை நினைத்து தமிழக மக்கள் இப்போதே கதிகலங்கி போயிருக்கிறார்கள். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த வருடத்தில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகி வருகிறது.. நேற்றைய தினம் ஈரோட்டில் 110 டிகிரி வெயில் கொளுத்தி திகிலை கிளப்பிவிட்டு வருகின்றன.. இங்கேயே இப்படியென்றால், ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.. ஊட்டியில் இதுவரை இல்லாத வெப்ப அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து, நீலகிரி மக்களுக்கே ஷாக் தந்துவிட்டது.

நேற்று தமிழகத்தில் மொத்தம் 18 இடங்களில் வெயில் சதமடித்திருக்கிறது… இந்தநிலையில், நாளைய தினம் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் துவங்குகிறது..

எப்போதுமே ஒவ்வொரு வருடத்தின் மே மாதத்தில்தான் கத்தரி வெயில் வரும்.. ஆனால், வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில் கத்தரி வெயில் என்ற வார்த்தைக்கு பதிலாக “கோடை காலம்” என்றே பயன்படுத்தி வருகின்றனர்..

எனினும், தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்படுகிறது.. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை அதாவது சனிக்கிழமை ஆரம்பமாகிறது.. இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து நீடிக்க போகிறது.

எப்போதுமே இந்த கத்தரி வெயிலில்தான், வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்போது, வெப்பநிலையே வேறு மாதிரியாக ஹிட் அடித்து கொண்டிருப்பதால, கத்தரியின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.. வரப்போகும் கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்குமா என்று தெரியவில்லை.. இப்போதைக்கு தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்ய துவங்கி உள்ளது.

இன்று முதல் 6ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் சொல்லியிருந்தாலும்கூட, நாளை துவங்க போகும் கத்தரி வெயிலை நினைத்து, இப்போதே தமிழக மக்கள் பீதியில் உள்ளார்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...