எனக்கு நீ வேண்டாம்!!! அவன் தான் வேண்டும்!!! – 6

 எனக்கு நீ வேண்டாம்!!! அவன் தான் வேண்டும்!!! – 6
உனக்காக மட்டும்- உன்னோடு மட்டும்- 
உனக்குள் மட்டும்- கரைந்து விடுவதே- 
காதலும் கடமையும் என கண்டு கொண்டவள் நான்!!! உனக்குள் இருக்கும் எனக்கும்கூட- 
எனக்கே எனக்கென ஒரு சிற்றிடம் கொடுத்தால்தான் 
நம் பேரன்பு பூர்த்தி ஆகும் என்பது புரியாதவனா நீ!!!
           பொண்ணுங்க நாலு பேரு சேர்ந்தாலே அங்க புரணியும், வீண் பேச்சு, வெட்டி அரட்டையும் தான் இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட பேசிக்கிட்டு இருக்கிறது எவ்வளவு நகைச்சுவையா இருக்கு தெரியுமா!? எல்லாத்துலயும் புதுமை, புரட்சின்னு பேசறவங்க கூட தன்னோட பொண்டாட்டி, தன் வீட்டு பொம்பளைங்கன்னு வந்துட்டா இதே மன நிலைக்கு வந்துடுறாங்கன்னு  நினைக்கும்போது ஏமாற்றமாத்தான் இருக்கு. நீயும் அப்படி ஒரு ஆளா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல மனோ.
           குழந்தைகள் வளர ஆரம்பிச்சிட்டாங்களூ எனக்கும் நேரம் கிடைக்குதுளூ உனக்கும் என் கூட செலவழிக்க நேரமில்லைளூ அதனால்தான் என்னுடைய நேரத்தை பயனுள்ளதா செலவிடலாம்ன்னு நம்ம பகுதியில இருக்கிற அந்த மகளிர் குழுவில் சேர்ந்தேன். ஏதோ உலக மகா நகைச்சுவை கேட்ட மாதிரி நான் அனுமதி கேட்ட அன்னைக்கு நீ சிரிச்சது எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா!? நல்ல வேல விருப்பம் இல்லைனா கூட மகளிர் அமைப்பில் சேர்ந்து நாட்டை காப்பாத்த கிளம்பிட்டாங்கப்பா எங்க வீட்டு ஜான்சிராணின்னு கிண்டலேட முடிச்சிட்ட. அதுவரைக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நான் எல்லாம் அங்க போயி என்ன செஞ்சிட போறேன் ஏதோ நேர போக்குக்கு போயிட்டு வரட்டும் அப்படி என்ற எண்ணத்தோடதான் நீ என்ன அதுல சேர அனுமதிருக்கேன்னு போகப்போக புரிஞ்சுகிட்டேன். பரவாயில்லை மனோ!! நீ என்ன எவ்வளவு குறைச்சலா மதிப்பிட்டாலும் எனக்கு கவல இல்ல, ஆனா என் மேல உனக்கு இருக்கிற அன்போட அடர்த்தி கொறஞ்சிடுச்சின்னு நினைக்கும் போதுதான் ரொம்ப வலிக்குது!!!
           நான் எத செஞ்சாலும் அத நான் செஞ்சதா மட்டும் பாரு மனோ. ஒட்டுமொத்த பொம்பளைங்களும் இப்படித்தாங்கிற வரையறையோட நீ என்னை பார்க்கிறதுதான் நல்லா இல்ல. துணியில நூல் வேலைப்பாடு செய்யுற அஞ்சு நாள் பயிற்சி ஒன்னு நடக்குது, ஆயிரம் ரூபாய் கட்டணம், நானும் போகட்டுமான்னு?! கேட்டேன். சரி – இல்ல – வேண்டாம் – உனக்கு எதுக்கு? -இப்படி ஏதாவது பதில் சொல்லாம் தானே!?!? அஞ்சு நாள்ல அதெல்லாம் கத்துக்கிட முடியுமா!? சும்மா பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து கூத்தடிக்க ஒரு சாக்கு! அப்படின்னு சொல்ற.. உன்னோட பொண்டாட்டி எப்படிப்பட்டவ!!? உண்மையிலேயே கத்துப்பாளா? அவளுக்கு ஆர்வம் இருக்கா? அவளால முடியுமா? அவள அனுப்புறதுக்கு விருப்பமா? இல்லையா? இப்படித்தான் மனோ நீ யோசிக்கணும். அத விட்டுட்டு ஒட்டுமொத்த பொம்பளைங்களும் இப்படித்தான் எப்படி நீ சொல்லலாம். அதை விட கொடும ஒட்டுமொத்த பொம்பளைங்களும் இப்படித்தான் உன்னோட பொண்டாட்டியும் அதில் ஒருத்தி அவ்வளவுதான?! அப்படித்தான?!
           வெளிப்படையா பார்க்க இது உனக்கு ரொம்ப சாதாரணமான பேச்சு மாதிரி தெரியலாம். நீ மட்டும் இல்ல நாட்டுல நிறைய பேரு இப்படி தான் பேசிகிட்டு இருக்காங்க பொண்டாட்டி துணிக்கடைக்கு கூப்பிட்டா- ஷபொம்பளைங்க துணி எடுக்க போனா விடிஞ்சிரும்,  அவங்க கூட எல்லாம் போகக் கூடாது’ பொண்டாட்டி நகை கேட்டா – ஏதாவது பொருள் கேட்டா- ஷஇந்த பொம்பளைகளுக்கு மட்டும் போதும்ங்கிற எண்ணமே வராதுப்பா’, இப்படி ஏதோ பொண்டாட்டிங்க செய்யுற எதுலயும் ஆம்பளைங்களுக்கு பங்கே இல்லாத மாதிரியும், அவங்க வீட்டுக்கு வாங்கற எதயும் இவங்க பயன்படுத்துறதே இல்லைங்கிற மாதிரியும், பலர் பேசிக்கிட்டுதான் இருக்காங்க. அவங்க எல்லோருக்கும் வேணும்னா இது ஒரு பெரிய விடயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்ல மனோ!!!
           மத்த பொம்பளைகளைல இருந்து உன்னோட பொண்டாட்டிய பிரிச்சு பாக்குற அளவுக்கு கூடவா நமக்குள்ள புரிதல் இல்லாம போச்சு!?!? என்ன யார் கூடவும் எப்பவும் ஒப்பிட்டு பேசாத மனோ!!! எல்லோரையும் போல என்னையும் எடை போடாதே!! எல்லோருக்கும் இருக்க மாதிரி எனக்கு ஒரு சின்ன தனித்துவம் இருக்கில்ல. அத கூட நீ கண்டு பிடிக்கலன்னா ஏமாற்றமா இருக்காதா? எனக்கே எனக்குன்னு, நான் நானாக இருக்கிற மாதிரி, ஒரு சின்ன தளம் – அதுக்குள்ள இயங்கனும்ன்னு ஒரு ஆசை – இருக்கக் கூடாதா எனக்கு? நான் என்ன முயற்சி எடுத்தாலும் ஏதாவது சொல்லி தடுக்கிறது தவிர, தட்டி கொடுக்க மனசு வரலையே உனக்கு, ஏன்??? இப்ப கூட நீ உன்னோட வேலை சம்பந்தமா மேல மேல நிறைய படிக்கிற, நிறைய பயிற்சிக்கு போற, கேட்டா  அது வருமானத்துக்காக – எங்களுக்காகன்னு, சொல்லுவ. உண்மையைச் சொல்லு? உன்னோட மதிப்பை உயர்த்திக்கனுங்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லைன்னு? வேலைக்கு போற உனக்கு அது இருக்கலாம். வீட்ல இருக்கதால எனக்கு அப்படி எதுவும் தோனக்கூடாதா? உன் சம்பளத்தை வாங்கி பொறுப்பா குடும்பம் நடத்துறது, குழந்தைகளை பார்த்துக்கிறது, சொந்த பந்தங்க சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கவனிக்கிறது, தொலைக்காட்சியில தொடர் பாக்குறது, இத தாண்டி ஒரு வீட்ல இருக்க மனைவி யோசிக்கக்கூடாது!!! அதுதானே உன்னோட எண்ணம். எனக்கு அது போதாது மனோ—
           ஆனா அவன் அப்படி இல்ல தெரியுமா? சும்மா இருக்காதன்னு சும்மா சும்மா சொல்லிக்கிட்டே இருப்பான்! இத கத்துக்கிறியா? அதை சொல்லித் தரட்டான்னு தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பான். நான் தான் இதெல்லாம் வேண்டானு தப்பிச்சு ஓட பாப்பேன். என்னதான் நீ ஒரு நல்ல குடும்பப் பெண்ணா மட்டும் இருந்தால் போதும்ன்னு நினைச்சாலும் நீ வாழுற சூழல்ல உனக்கு ஒரு இடத்த, ஒரு மரியாதைய உருவாக்கிக்கிடா தான் அந்த நல்ல குடும்பப் பெண்ணுங்கிற அடையாளத்துக்கே அழகுன்னு சொன்னான். அவன் சொன்னதுதான் சரி மனோ. நான் அலுவகத்தில் செய்யுற வேலைய உன்னால எளிதா முடியும். ஆனா நீ வீட்டுல செய்யுறத எல்லாம் உன்ன போல எளிதா என்னால் செய்ய முடியுமாங்கிறது பெரிய சந்தேகம்தான்னு!!! சொன்ன அவனுடைய அந்த பண்பு உனக்கு வருமா மனோ?? அதனால தான் சொல்றேன்-
நீ எனக்கு வேண்டாம்!!! அவன் தான் வேண்டும்!!!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...