நீயெனதின்னுயிர் – 7 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 7 – ஷெண்பா
7
“வரவர உன்னோட அலம்பலுக்கு அளவே இல்லாமல் போச்சு ஜோ! இப்படி உடம்பை வருத்திகிட்டு என்னைப் பார்க்க வான்னு, எந்த சாமிடீ சொல்லியிருக்கு? தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில் இருக்கு; அதை விட்டுட்டு, இவ்வளவு தூரம் வரணுமா?” திட்டிக் கொண்டே, ஜோதியுடன் சதுர்ஷிரிங்கி மலைக் கோவிலின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள் வைஷாலி.
“உன்னை மாதிரியே இந்த கணேஷ்ஜியும் எனக்கு ப்ரெண்ட். நானும், அவரும் முதன்முதலில் இந்தக் கோவிலில்தான் சந்திச்சோம். உனக்குத் தெரியும் தானே!” என்ற ஜோதியின் முகம், சட்டென பொலிவிழந்து போனது.
“அடடா! எனக்குத் தெரியாதா…? நான் சும்மா விளையாடினேன்” என்றவள், ஆறுதலுடன் அவளது தோளை அணைத்துக் கொண்டாள். “முதல்ல அப்பப்போ வயலின் வாசிக்கறதை நிறுத்து ஜோ! சியர் அப்’ என்று தோழியைத் தேற்றியவள், “நீ ஆட்டோ ஸ்டாண்டில் இரு. நான் இந்தத் தட்டைக் கொடுத்துட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
கடையில் தட்டைக் கொடுத்துவிட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தவள், “ஹலோ!” என்ற குரல் அருகில் கேட்டதும், திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அங்கே சிரித்தபடி நின்று கொண்டிருந்தான் விக்ரம். ‘இவன் எங்கே இங்கே? ஹய்யோ! ஜோதி வேற இருக்காளே…’ என்று தவித்தவளது பார்வை, அவனது முகத்தில் நிலைத்திருந்தது.
“ஹலோ! வைஷாலி…!” என்று அவளது முகத்திற்கு நேராகக் கையை ஆட்டினான்.
சுதாரித்துக் கொண்டவள், “சார்! நீங்க இங்கே… எதிர்பார்க்கவேயில்லை” என்றாள் மழுப்பலாக.
“அதை உன் பார்வையே சொல்லுதே. அதிருக்கட்டும் நீ எங்கே இங்கே?” என்றான்.
“அது எக்ஸாம் வருதில்லையா…” என்றாள்.
“ஓ! சாமிகிட்ட இவ்வளவு லஞ்சம் கொடுக்கறேன்னு, பேரம் பேசிட்டு வர்றியா?” என்று கிண்டலாகக் கேட்டான்.
யோசிக்காமல், “ஆமாம்…” என்றவள், “ஆஹ்! நான் ஏன் லஞ்சம் கொடுக்கணும்? சும்மா ஹாஸ்டலிலேயே இருக்க, போர் அடிச்சுது; அதோட இன்னைக்கு சண்டே இல்லையா? அதான் வந்தேன்” என்றாள். பேச்சு அவனிடமிருந்தாலும் கண்கள் ஜோதியைத் தேடின. அவளது கண்கள் அலைபாய்வதைக் கண்டதும், சுற்றும் முற்றும் பார்த்தான்.
“யாரைத் தேடுற? ஃப்ரெண்ட்ஸ்கூட வந்தியா?”
“இல்லை. உங்க கூட வரும் ஒட்டுண்ணியைக் காணோமேன்னு தேடினேன். வரலையா?” என்றாள்.
“வைஷாலி! ராகவைப் பத்தி உனக்குத் தெரியாது. அவனை மாதிரி ஒருத்தனைப் பார்ப்பது ரொம்பவே கஷ்டம். நீ ஏன் எப்போ பார்த்தாலும், அவனை வம்பிழுத்துட்டு இருக்க?” என்றான் சற்று அழுத்தமாக.
‘ஆமாம். சரியான சிடுமூஞ்சி!’ என்று சொல்ல நினைத்த வார்த்தையை, அவனது முகத்தைக் கண்டதும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள்.
“அவரைப் பத்தி எனக்கென்ன சார் வந்தது? ஆனால், என்னை மாதிரி ஒரு அழகான, ஸ்மார்ட்டான செக்ரட்டரியை நீங்க இழக்கறீங்க; இதனால, எனக்கு ஒண்ணும் நஷ்டமில்லை!” என்று கையை விரித்து, தோள்களைக் குலுக்கினாள். “சரிங்க சார். எனக்கு நேரமாகுது; நான் கிளம்பறேன்…” என்றாள்.
புன்னகைத்தவன், “ஹாஸ்ட்டலுக்குத் தானே? அரைமணி நேரம் வெயிட் பண்ணு, வந்திடுறேன்!” என்றான்.
“ஹும்! நான், உங்களை மாதிரி இல்லை சார்! எனக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு. கிளம்பறேன் பை!” என்றவள், அவன் மேலும் பேசும் முன் கிளம்பிவிட எண்ணி கையசைத்துவிட்டு, வேகமாக அவனது பார்வையிலிருந்து மறைந்தாள்.
அவள் செல்வதையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு ஆட்டோவின் பின்னால் மறைந்தபடி தன்னை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்தான்.
“ஜோ…தி…!” என்று முணுமுணுப்பாக அவளது பெயரை உச்சரித்தவன், யோசனையுடன் தாடையைத் தடவிக்கொண்டான்.
“போனை எடுக்காமல், இந்த ராகவ் என்ன செய்றான்?” கடுப்பில் முணுமுணுத்தபடி வீட்டினுள் நுழைந்த விக்ரமின் நாசியை, கமகமவென்ற சமையலின் மணம் தாக்கியது.
சமையலறையிலிருந்து சீமா வெளிவர, ஆச்சரியத்துடன், “ஹேய்! நீ எப்போ வந்த? வர்றதா சொல்லவேயில்லை. வந்ததும் வராததுமா, சமையல்ல புகுந்திட்டியா?” என்றான் புன்னகையுடன்.
“சர்ப்ரைஸ் விசிட்… அதோடு, நீ இப்படி தப்பர்த்தம் பண்ணிக்க வேண்டிய அவசியமே இல்லை. சமைச்சி வச்சதை டேஸ்ட் பண்றது மட்டும்தான் என் வேலை.”
“அதானே பார்த்தேன்! நீ திருந்திட்டியோன்னு, ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.”
“அது சரி” என்று தலையாட்டியவள், “வார்த்தைக்கு வார்த்தை பேசினாலும், உன் முகத்தில் இன்னைக்கு ஒளி குறையுதே! ஏதாவது பிராப்ளமா?” என்று விசாரித்தாள்.
திவானில் கால்நீட்டி அமர்ந்தவன், “பிராப்ளம் இல்ல. ஆனால், சின்னக் குழப்பம்” என்றபடி அவளது முகத்தைப் பார்த்தான்.
“வழக்கமா நீ தானேப்பா எல்லோரையும் குழப்புவ? உன்னையும் ஒருத்தர் குழப்பறாங்களா! ஆச்சரியமா இருக்கே” என்று வியந்தாள்.
“இன்னைக்கு சதுர்ஷிரிங்கி கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கே வைஷாலியை மீட் பண்ணினேன்.”
“நியாயமா, இதுக்கு நீ சந்தோஷப்படணும். இதுல, குழப்பம் எங்கேயிருந்து வந்தது?”
“ம், வைஷாலி கிளம்பினதும், நான் கோவிலுக்குப் போகத் திரும்பினேன். அங்கே ஒரு மரத்துக்குப் பின்னால ஜோதி மறைஞ்சி நின்னு என்னைப் பார்த்துட்டு இருந்தா.”
“ஓ!” என்று புருவத்தை உயர்த்தினாள் சீமா.
“அவள் பிரெக்னண்ட்டா இருக்கா சீமா!” என்றான்.
வாய்விட்டு நகைத்தவள், “ஹேய்! கல்யாணமானா இதெல்லாம் சகஜம் தானே. இதுக்கா இத்தனை பில்டப்?” என்று கேட்டாள்.
“இல்லை சீமா. சம்திங் ராங். அவளோட அந்தச் சிரிப்பு, கண்களில் தெரியும் அந்த ஸ்பார்க்… அதெல்லாமே மிஸ்ஸிங்!” என்றான் உணர்ச்சிவயப்பட்டு.
“ஏன்? போய் அவளையே கேட்கறது தானே?” என்றாள் சீமா எரிச்சலுடன்..
“கேட்டிருப்பேன். ஆனால், நான் அவளைப் பார்த்ததும், வேகமா ஆட்டோவில் ஏறிப் போய்ட்டா.”
‘ஸ்’ என்று பெருமூச்சு விட்டவள், “விக்ரம்! இது உனக்குத் தேவையில்லாத விஷயம். தூக்கிப் போட்டுட்டுப்போ. ஏற்கெனவே அவளுக்கு உன்னைக் கண்டால் பிடிக்காது. இதை, எத்தனையோ முறை உன்னிடம் சொல்லியிருக்கேன். இப்பவும் சொல்றேன்” என்றாள்.
“என்னால அப்படி இருக்க முடியலையே. அதான் ராகவ்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராகவிடமிருந்து அழைப்பு வந்தது.
விக்ரம் அவசரமாகப் போனை எடுக்க, “எத்தனைத் தடவை சொன்னாலும், உனக்குப் புரியாது” என்ற முனகலுடன் எழுந்து சென்றாள் அவள்.
“ராகவ்! எத்தனை விஷயங்களை என்னிடம் மறைச்சிருக்க?” என்று பொரிந்தான்.
“என்ன சார் சொல்றீங்க? நான் என்ன செய்தேன்?” -புரியாமல் கேட்டான்.
“இன்னைக்கு நான், கோயில்ல ஜோதியைப் பார்த்தேன்” என்றதும், மறுமுனையில் சப்தமே வராததால், “ராகவ்!” என்று உரக்க அழைத்தான்.
‘ஹும்!’ என்று சீறலாக மூச்சுவிட்ட ராகவ், “இதைச் சொல்ல எனக்குச் சங்கடமாகத்தான் இருக்கு. ஆனாலும்… சாரி சார்! என் குடும்ப விஷயத்தில், நீங்க தலையிடாதீங்க!” என்றான் முகத்திலடித்தாற் போல்.
ராகவின் வார்த்தைகள் விக்ரமிற்கு ஆத்திரத்தைக் கொடுக்க, மேற்கொண்டு அவன் பேச இடம் கொடுக்காமல் போனை அணைத்தவன், கதவை அறைந்து மூடிவிட்டு வெளியேறினான்.
அந்தச் சப்தத்தைக் கேட்டே விஷயத்தை யூகித்து விட்ட சீமாவிற்கு, விக்ரமின் இந்தக் குணம் பெரும் வேதனையைக் கொடுத்தது.
”ஹாய் வைஷாலி!” ஸ்நேக பாவத்துடன் ஒலித்த புதிய குரலைக் கேட்டதும், “சாரி… நீங்க” என்று இழுத்தாள்.
“அப்போ, என் நம்பரை நீ சேவ் பண்ணலைன்னு நல்லா புரியுது. ஹும்! நான்தான் ரொம்பப் பத்திரமா உன் நம்பரை பர்சனல்ன்னு சேவ் பண்ணி வச்சிருக்கேன்” என்றதும் தான், பேசுவது ‘சீமா’ என்று வைஷாலிக்குப் புரிந்தது.
நாக்கைக் கடித்துக் கொண்டவள், “ஹய்யோ! சீமா மேடம்… சாரி சாரி; நீங்க சொல்றது போல எதுவும் இல்லை. உங்க பிஸினஸ் கார்ட் பத்திரமா என் பர்சில் இருக்கு. தேவையில்லைன்னு நினைச்சா வச்சிருப்பேனா? உங்க நம்பரை ஃபீட் பண்ணி, ரிஜெக்ட்டில் போட்டிருப்பேனே? பாருங்க… உங்க குரலை வச்சே, கண்டுபிடிச்சிட்டேன்!” என்று சமாளித்தாள்.
“இது நல்ல கதையா இருக்கே! நான் க்ளூ கொடுத்தேன்; நீ ஈசியா கண்டுபிடிச்சிட்ட” என்று மடக்கினாள் சீமா.
“அச்சச்சோ! நான் சரண்டர்.”
“அப்படி வா வழிக்கு. நீ என்னிடம் சரண்டர் ஆனதைக் கொண்டாட, நாம இன்னைக்கு நைட் டின்னருக்கு வெளியே போறோம்.”
சீமாவின் அழைப்பை எதிர்பார்க்காத வைஷாலி திடுக்கிட்டாள். “டின்னருக்கா! சாரி சீமா மேடம்! சான்சே இல்லை. வெளியே போனால், நைட் எட்டு மணிக்குள்ள நாங்க ஹாஸ்ட்டலுக்குத் திரும்பி வந்தே ஆகணும். அதோடு, காலேஜ் ஜி.எஸ் நானே ரூல்ஸை மீறினா நல்லா இருக்காது” என்று நாசுக்காக மறுத்தாள்.
“அடடா! புல்லரிக்க வைக்கிறியே வைஷாலி!” என்று கேலியாகச் சொன்னவள், “அதைப் பத்தி நீ கவலைப்படாதே. பர்மிஷன் வாங்கறது என் வேலை” என்று தன் நிலையிலேயே நின்றாள்.
“இல்லை, சீமா மேடம்…”
“ப்ளீஸ் வைஷாலி! எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசவேண்டியிருக்கு” என்றாள் அழுத்தமாக.
அவளது குரலில் இருந்த ஏதோ ஒன்று, வைஷாலியை சம்மதம் சொல்ல வைத்தது.
“தேங்க்ஸ் வைஷாலி, நீ தயாராக இரு. இன்னும் ஒன் ஹவர்ல, நானே வந்து உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன். பை!” என்று போனை வைத்தாள் சீமா.
‘தன்னிடம் மனம்விட்டுப் பேச, அப்படி என்ன இருக்கிறது? என்ன விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசப்போகிறார்கள்?’ குழப்பத்துடனேயே, சீமாவின் நம்பரை மறக்காமல் தனது செல்போனில் பதிவு செய்தாள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...