உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 6 – சுதா ரவி
அவன் கண்களில் தெரிந்த மாற்றத்தை கண்டு “என்ன இவன் நாலு வருஷம் கழித்து கூட அவளை மறக்காம இப்படி பைத்தியம் மாதிரி இருக்கானே” என்று நினைத்துக் கொண்டான்.
பிறகு அவன் தோள்களை பற்றி உலுக்கி…”டேய்! நீ என்ன சின்ன பையனா? இருபத்தொன்பது வயசாகுது. என்னவோ காலேஜ் படிக்கிற பையன் மாதிரி மறக்க முடியாது வைக்க முடியாதுன்னு டயலாக் பேசிகிட்டு இருக்கே. வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லாமே மாறி போகும். சும்மா புலம்பிகிட்டு இருக்காம ஆகுற வழியை பாரு”என்றான் விஸ்வா.
அவனை திரும்பி பார்த்த கதிர் “உனக்கு புரியாது விஸ்வா காதலின் வலி. அதை அனுபவிச்சவங்களுக்கே புரியும். மனசென்ன டிரஸ்ஸா நினைச்சப்ப கழட்டி மாத்துறதுக்கு”.
“சரி -சரி அதை விடு வா எங்கேயாவது வெளியே போயிட்டு வருவோம்”என்றான் விஸ்வா.
“இல்லை-டா எனக்கு இங்கே வந்ததும் பழைய நியாபகங்கள் வந்துடுச்சு. அப்புறம் சாயங்கலாம் பொண்ணு பார்க்க போகணும்ன்னு சொன்னாங்கடா அம்மா. சீக்கிரம் வர சொன்னாங்க”என்றான் கதிர்.
அவன் பதிலில் அதிர்ச்சியாகி “பொண்ணா? யாருக்கு டா உங்க அப்பாவுக்கா?”என்றான் விஸ்வா.
“ஏய்! உன்னை”…என்று சிரித்தபடியே “எனக்கு தாண்டா.நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்றாங்க அம்மா. அது தான் என்ன பண்றதுன்னு புரியலடா”என்றான் கதிர்.
“பேசாம கல்யாணம் பண்ணிக்க.பிரச்சனை முடிஞ்சு போய்டும்.அவளுக்கு உன்னோட வாழ குடுத்து வைக்கல போய் சேர்ந்துட்டா.எத்தனை வருஷத்துக்கு இப்படி அவ நினைப்பிலேயே உட்கார்ந்திருப்பே”என்றான் விஸ்வா.
அவன் அப்படி சொன்னதும் முகம் இறுக “என்னால அவளை மறந்திட்டு இன்னொரு வாழ்க்கையை சத்தியமா வாழ முடியாது விஸ்வா. எனக்கும் அவளுக்குமான உறவு இப்படி ஒரே நாளில் அறுந்து போக கூடியது இல்லடா”என்றான் கதிர்.
அவன் பேச்சில் சலிப்புற்ற விஸ்வா “மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா.அப்போ பேசாம நீயும் செத்து போயிடு.அப்புறம் ரெண்டு பேரும் பேயா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊரை சுத்துங்க.ஏண்டா இப்படி?என்னை கடுப்பேத்தாம ஒழுங்கு மரியாதையா போய் பெண்ணை பார்க்கிற கல்யாணத்தை பண்ணிக்கிற”என்றான் விஸ்வா.
நீண்ட நெடிய பெருமூச்சொன்றை விட்டு “சரி-டா,நான் கிளம்புறேன்.வீட்டுக்கு வா அம்மா உன்னை பார்க்கனும்ன்னு ஆசைப்படுவாங்க.எனக்கு நீ ஒருத்தன் மட்டும் தாண்டா இருக்கே மனசு விட்டு பேச. என்னை நீயே புரிஞ்சுக்கலேன்னா எப்படி”என்றான்.
கதிரின் கைகளை பற்றி ஆதரவாக தட்டிக் கொடுத்து “மச்சான் நீ நல்லா இருக்கணும்டா. உன் வலி எனக்கு புரியுது.உன் கூடவே இருந்து பார்த்தவனாச்சே எனக்கு தெரியாம போகுமா?ஆனா, சில கசப்புகளை விழுங்கி அதை கடந்து போக பழகிக்கணும்.கசப்பா இருக்கேன்னு தொண்டைக்குள்ளேயே நிறுத்தி வச்சுகிட்டாலும் கஷ்டம் வெளில துப்பிட்டாலும் உடம்பு குணம் அடையாது.”
நிதர்சனங்கள் மனதிற்குப் புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள காதல் கொண்ட மனம் தடுமாறியது.
மதியம் மூன்று மணி அளவில் சிவதாண்டவத்தின் இல்லம் பரபரப்பாக இருந்தது.மருமகள்கள் பட்டுப்புடவை சரசரக்க இங்குமிங்கும் போய் கொண்டிருந்தனர். ஈஸ்வரியோ பெண் வீட்டிற்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை உணவு மேஜையில் எடுத்து வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
பெண்ணுக்கு புடவை,நகை மற்றும் சீர் வரிசைகள் என்று தட்டு தட்டாக உணவு மேஜை முழுவதும் வைத்திருந்தார் ஈஸ்வரி. அவருக்கு உதவிக் கொண்டே இருந்த மருமகள் மகா “ஏன் அத்தை இந்த இடம் முடிவான மாதிரியா? நீங்க நிச்சயத்துக்கு சீர் எடுத்து வைக்கிற மாதிரி எல்லாம் வாங்கி வச்சு இருக்கீங்க?” என்றாள்.
மருமகளை பார்த்து புன்னகை சிந்தி விட்டு “ஆமாம் மகா, இன்னைக்கு பெண் பார்க்க போறது பேருக்கு தான். இன்னைக்கே தட்டை மாத்திட்டு வந்துடுவோம்”என்றார் ஈஸ்வரி.
அவள் சற்று அதிர்ச்சி அடைந்து “கதிருக்கு பிடிக்க வேண்டாமா அத்தை. பொண்ணு சம்மதம் சொல்லிடுச்சா? கதிரை பார்க்காமலே”என்று கேட்டாள் மஹா.
அவளின் கேள்வியை பார்த்து அவள் தோளில் மெல்ல தட்டிக் கொடுத்து “எங்க பசங்க என்னைக்கும் எங்க வார்த்தையை மீற மாட்டாங்க. அதுமட்டுமில்லை பெண்ணுக்கும் விருப்பம் தான்னு சொல்லிட்டார் பெண்ணோட அப்பா” என்றார் ஈஸ்வரி.
இவர்கள் இங்கே ஆர்பாட்டமாக கிளம்பிக் கொண்டிருக்க, தன்னறையில் இருந்த கதிரின் மனமோ நிலைகொள்ளாமல் தவிப்புடன் இருந்தது. பீரோவில் இருந்த உத்ராவின் படத்தை பார்த்துக் கொண்டே நின்றிருந்தானே தவிர அவனால் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை.
‘ஏண்டி என்னை விட்டு போன? உன்னோடு வாழ போற நாட்கள் ஒவ்வொன்னையும் என் மனசில ஓவியமா வரைஞ்சு வச்சிருந்தேனே.இப்படி பாதியில என்னை தவிக்க விட்டு நீ மட்டும் நிம்மதியா போயிட்டியே.நீ எனக்காக இருந்திருக்க வேண்டாமா? நீ என்னை நினைச்சிருந்தா எனக்கு இந்த சிக்கல் வந்திருக்குமா? உனக்கு சுயநலம்.நீ உன்னை மட்டுமே நினைச்சு என்னை விட்டு போயிட்டியே” என்று தன் முன்னே இருந்த புகைப்படத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.
அவன் கீழே இறங்கி வருவான் என்று காத்திருந்த கந்தவேலும், குமாரவேலும் அவனை காணாது கதிரின் அறைக்கு வந்தனர். அவர்கள் அறை கதவை தட்டியதும் சுயநினைவுக்கு வந்தவன் கையில் கிடைத்த சட்டையை எடுத்துமாட்டிக் கொண்டு, லேசாக தலைவாரி அவசரமாக கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான். வெளியில் வந்தவனின் கோலத்தை கண்டு எரிச்சலைடைந்து அவனை இழுத்து கொண்டு போய் அவர்களே சட்டையை மாற்றி அழைத்து வந்தனர்.
வீட்டில் இருந்து நான்கு கார்களில் பெண்ணின் வீட்டிற்கு சென்று இறங்கினர். இவர்களை கண்டதும் பெண்ணின் தகப்பனார் மயில்வாகனம் வாசலுக்கே வந்து வரவேற்றார். கணவன் மனைவி இருவரும் கதிரை பார்த்து திருப்தியாக பார்வையை பரிமாறி கொண்டனர். அனவைரும் வந்தமர்ந்து சற்று இயல்பாக பேச ஆரம்பித்ததும் பெண்ணை அழைத்து வர சென்றார் பெண்ணின் தாயார்.
கதவை தட்டி விட்டு பெண்ணின் அறைக்குள் நுழைந்தவர்.அங்கு பெண் இருந்த நிலையை கண்டு உள்ளுக்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு “என்ன கவி இது மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்துட்டாங்க.நீ இன்னும் டிரஸ் மாத்தாம உட்கார்ந்திருக்கே?”
அவரின் பரபரப்புக்கு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நாற்காலியில் அமர்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல தலையை திருப்பி அலுப்பான ஒரு பார்வையுடன் “மாம்! எனக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட்ஸ் எல்லாம் பிடிக்காதுன்னு உங்களுக்கே தெரியும்.நான் வீட்டிலே எப்படி இருப்பேனோ அப்படியே பார்த்திட்டு போகச் சொல்லுங்க”என்றாள் கவிதா.
அவளின் பேச்சில் மனதில் தோன்றிய ஆத்திரத்தை மறைக்க முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க “பொம்பளை புள்ளைக்கு செல்லம் குடுக்காதீங்கன்னு சொன்னா கேட்டாரா உங்க அப்பா?ஹாலில் அவங்கெல்லாம் வந்து உட்கார்ந்து இருக்காங்காடி தயவு செஞ்சு இந்த மைசூர் சில்க்கையாச்சும் கட்டிக்கிட்டு வந்து நில்லு”என்று கெஞ்சினார்.
தாயாரின் பேச்சில் எரிச்சலடைந்த கவி வேகமாக அமர்ந்திருந்த நாற்காலியை பின்னுக்குத் தள்ளி “என்ன மாம் இது?நான் முன்னமே சொல்லி இருக்கேன். இந்த மாதிரி என்னை கொண்டு வச்சு கார்னர் பண்ண கூடாதுன்னு”என்று கத்தினாள் கவிதா.
அவளின் சத்தத்தில் பயந்து போய் பாய்ந்து சென்று அவள் வாயை மூடி “ஐயோ! சத்தம் போடாதடி.இது பொண்ணு பார்க்கிறதா மட்டும் இருந்தா நீ எப்படியோ போய் தொலைன்னு விட்டிருப்பேன்.இன்னைக்கே தட்டை மாத்திக்கிறதாவும் இருக்காங்க.அவங்க வீட்டு மருமகள்கள் எல்லாம் ஜம்முன்னு பட்டுபுடவை கட்டிக்கிட்டு வந்திருக்காங்கடி.தயவு செஞ்சு கட்டிக்கிட்டு வந்து சேரு கவிமா” என்று கெஞ்சலில் முடித்தார்.
மெல்ல தன் நிலையிலிருந்து இறங்கிய கவிதா புடவையை எடுத்து கட்டிக் கொண்டு தயாரானாள். அவளை அழைத்து சென்று எல்லோர் முன்னிலையும் நிறுத்தி விட்டு நீண்ட பெருமூச்சை விட்டார். மனதிற்குள் ‘வேறு எதுவும் பிரச்சனை வராமல் காப்பாற்று தாயே’ என்று வேண்டிக் கொண்டிருந்தார்.’
அடர்நீலத்தில் கோல்டன் கலர் போர்டர் போட்ட புடவையில் தோகை மயிலென வந்து நின்ற கவிதாவை அனைவருக்கும் பிடித்தது. ஆனால் பார்க்க வேண்டியவனோ தலையை குனிந்தபடி அமர்ந்திருக்க,ஈஸ்வரி அவனருகில் குனிந்து “கதிர் பெண்ணை பாரு.நீ இப்படி உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தா அப்பா இங்கேயே உன்னை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க.பொண்ணு ரொம்ப அழகா உனக்கு பொருத்தமா இருக்காடா” என்றார்.
அவர் சொன்னதற்காக தலையை நிமிர்த்தி ஒரு முறை பார்த்தவன் அதன் பிறகு அவள் புறம் திரும்பவில்லை. மயில்வாகனதுக்கும் அவர் மனைவிக்கும் கதிரைப் பார்த்தது திருப்தியாக உணர்ந்தனர். கவிதாவிற்கும் அவனது தோற்றமும் , அமைதியான அவனின் குணமும் பிடித்து போனது.பெரியவர்கள் தட்டை மாற்றிக் கொள்வதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இடைப் புகுந்த கவிதா “அப்பா நான் மாப்பிள்ளை கிட்ட பேசணும்” என்றாள்.
சிவதாண்டவதிற்கு அவள் அப்படி கேட்டது பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டார். மயில்வாகனதிற்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க மனைவியை நோக்கி புருவத்தை உயர்த்தினார்.அவரும் என்ன செய்வது என்று புரியாமல் மகளை பார்த்து தீவிழி விழிக்க அவளோ கதிரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிரை அழைத்துக் கொண்டு தன்னறைக்கு சென்று பேசி விட்டு சிறிது நேரம் கழித்து இருவரும் திரும்பினர். வெளியில் அமர்ந்திருந்த அனைவரும் வெவ்வேறு மன நிலையில் இருந்தனர். பேசி விட்டு வந்த கதிர் அம்மாவின் பக்கத்தில் சென்றமர்ந்து கொண்டான். கவிதா தன் அம்மாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.சிவதாண்டவம் “சரி பொண்ணும் மாப்பிள்ளையும் தான் பேசியாச்ச்சே இனி தட்டை மாத்தலாமா?” என்று கேட்டார்.
அதுவரை ஒரு வித தவிப்புடன் இருந்த மயில்வாகனம் தாண்டவத்தின் கேள்வியில் மகிழ்ந்து முகமெல்லாம் சிரிப்புடன் “அதுக்கென்ன சம்பந்தி மாத்திடுவோம்” என்றார். அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்த கவிதா “அப்பா ஒரு நிமிஷம் என்றவள் சற்று தயங்கி. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லப்பா” என்றாள்.
அவள் சொன்ன பதிலில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க மயில்வாகனம் பொறுமையை இழந்து அவளிடம் போய் “என்னம்மா பேசுற?புரிஞ்சு தான் பேசுறியா?பெரியவங்க எங்களுக்கு தெரியும் சின்னவங்களுக்கு என்ன செய்யணும்ன்னு.எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் உளராம போ உள்ளே!” என்றார்.
அவரின் கோபத்தை கண்டு சற்று கலங்கி ஒரு நிமிடம் கதிரை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் அச்சத்தை வெளிப்படுத்த உடனே தந்தையிடம் திரும்பி “இல்லபா கல்யாணம் பண்ணிக்க போறது நான். இவரோட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு நினைக்கிறேன்”என்று சொன்னவளின் கண்களின் ஓரம் சற்று ஈரமாக இருந்தது.
அங்கு நடந்தவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி அவளருகில் சென்று “ஏம்மா என் பையன் உன் கிட்ட ஏதாவது தவறா பேசிட்டானா” என்றார். அவரின் முகம் பார்க்காது இல்லை என தலையாட்டியவள் “எனக்கு விருப்பம் இல்லேன்னு சொன்ன பிறகு என்னை கட்டாயபடுத்த நினைக்காதீங்க. தயவு செஞ்சு எல்லோரும் இங்கே இருந்து கிளம்பி போங்க” என்று கத்தி விட்டு உள்ளே ஓடினாள்.
அவள் அப்படி சொன்னதும் அதுவரை அமைதியாய் இருந்த சிவதாண்டவமும் அவரின் மகன்களும் கோபம் கொண்டு மயில்வாகனத்திடம் “எங்களை நல்லா கூப்பிட்டு வச்சு கழுத்தை அறுத்திட்டே. பொண்ணுக்கு சம்மதம் தானான்னு கேட்டுட்டு தானே வந்தோம்.. மனைவியையும் மருமகளைகளையும் பார்த்து “இன்னும் என்ன நிக்கிறீங்க கிளம்புங்க” என்றார் உறுமலுடன்.
மயிவாகனமோ மகளின் நடவடிக்கை புதிதில்லை என்றாலும் இப்படி அடுத்தவர்களின் முன்பு அவள் அப்படி நடந்தது இல்லையே என்று குழம்பியும் மனம் நொந்து நின்று கொண்டிருந்தார்.
இவ்வளவு அமர்களங்கள் நடக்க கதிரோ நிம்மதியாக உணர்ந்தான். எங்கே தன் உத்ராவை மறந்து இந்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டி வருமோ என்ற பயத்தில் இருந்தவன் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பார்வையாளனாக மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
அங்கிருந்து கிளம்பிய கார்கள் சீறிக் கொண்டு தாண்டவத்தின் இல்லத்தை நோக்கி பறந்தது. வீட்டின் வாயிலில் இறங்கியதும் காரின் கதவை ஓங்கி அடித்து சாத்தி விட்டு வரவேற்பறையின் உள்ளே சென்றவர் கையில் இருந்த செல் போனை ஓங்கி தரையில் அடித்தார். “சை…இந்த ஊர்ல இத்தனை வருஷம் தனியாளா ராஜாங்கம் நடத்திகிட்டு இருந்தேன். இதுவரை இப்படியொரு அவமானத்தை சந்திச்சது இல்லை”.
அவரின் கோபம் கண்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ந்திருக்க கந்தவேலுவோ நேரே சென்று கதிரின் சட்டையை பிடித்து “நீ போய் என்னடா பேசின அந்த பொண்ணு கிட்ட? ஏண்டா?ஏண்டா?…இப்படி இருக்க.ஒரு பொண்ணு பார்க்க போறதுல கூடவா இவ்வளவு பிரச்சனை.அவமானப்படுதிட்டியேடா அப்பாவை”என்றான்.
கந்தவேலு உணர்ச்சி வசப்பட்டதை பார்த்து குமாரவேலும் கதிரை அறைந்து “இந்த சிதம்பரத்தில் ஒருத்தன் இவரை கை நீட்டி பேசிட முடியுமாடா.இன்னைக்கும் அவர் ஒரு அரசாங்கமே நடத்திகிட்டு இருக்கிறவரை பார்த்து ஒரு சின்ன பொண்ணு வெளில போன்னு சொல்லுற அளவுக்கு வச்சிட்டியே.உன்னால அப்பாவுக்கு அவமானம், அசிங்கம் மட்டும் தாண்டா மிஞ்சி இருக்கு. படிப்பு வரல, தொழில் செய்ய தெரியல…ஏண்டா இப்படி இருந்து அப்பாவை அசிங்கப்படுத்துற” என்று மீண்டும் மீண்டும் அடிக்க கிளம்ப,அவனிடமிருந்து கதிரை பிரித்து மாடி அறைக்குப் போக சொன்ன ஈஸ்வரி நெஞ்சின் பாரம் தாங்காமல் மயங்கி விழ, மாடிக்கு போக இருந்த கதிர் ஓடி வந்து அவரை தாங்கி பிடித்து தன் மடியில் சாய்த்துக் கொண்டான்.
அதுவரை இருந்த சூழ்நிலை மாறி அனைவரும் ஈஸ்வரியை கவனிக்க ஆரம்பித்தனர். கலகலப்பாக ஆரம்பித்த பெண் பார்க்கும் படலம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. குடும்பத்தின் துயரத்தை பார்த்து கதிரின் மனம் வேதனை அடைந்தது…
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |