~
பயணம்
~
சென்னை டூ பெங்களூரு
சாலை வழியாக செல்வது என்றால் வழக்கமாக வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்வது தான் அனைவரும் அறிந்த வழித்தடம்.
பழைய மெட்ராஸ் ரோடு எனப்படும் ராணிப்பேட்டை, சித்தூர், பலமனேர், முல்பகல், ஹொஸகோட்டெ வழியாக செல்வது மற்றுமொரு வழித்தடம். இத்தடத்தில் சித்தூர் முதல் ஹொஸகோடெ வரை புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பிரமாதமாக இருக்கிறது. விரைவாக பெங்களூரு சென்றுவிட முடிகிறது. டிராபிக் கும் அவ்வளவு அதிகம் கிடையாது.
வழியில் land of dosa எனப்படும் முல்பகலில் விதவிதமான தோசை வகைகளை உண்டு மகிழ நிறைய உணவகங்கள் இருக்கின்றன. ஶ்ரீ கிருஷ்ணா கிராண்ட் மிகவும் பிரபலமான மிகச் சிறந்த உணவகம்.
மேலே சொல்லப்பட்ட இரண்டு வழித்தடங்களுக்கு இணையாகவே அதாவது பேரலல் ஆக இன்னொரு வழித்தடமும் உள்ளது. அவை இரண்டு வழித் தடங்களுக்கு மத்தியில் இந்த வழித்தடமும் உள்ளது.
வேலூரிலிருந்து பள்ளிகொண்டா, குடியாத்தம், பேரணாம்பட், வெங்கடகிரி கோட்டா, கே ஜி எப், வழியாக ஹொஸக்கோடெ பெங்களூர் வழித்தடம் தான் அது.
இப்போது NE 7 புண்ணியத்தில் அதிகம் அறியப்படாத அந்த வழித்தடம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக தொடங்கியுள்ளது.
பேரணாம்பட்டில் இருந்து வெங்கடகிரி கோட்டா வரை சுமார் 30 கிமீ தூரத்திற்கு கவுண்டின்ய மலைத் தொடரை கடக்கும் மலைச்சாலை Ghat section இயற்கை எழில் கொஞ்சுகிறது.
மனித சஞ்சாரமற்ற அச்சாலையில் செல்வது பெங்களூரு பயணத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.
தமிழகம் வரும் பெரும்பாலான லாரிகள் இச்சாலைகளில் தான் வருகின்றன.
மலைத்தொடரின் மத்தியில் ஹனுமார் கோவில் ஒன்று மட்டுமே உள்ளது. கோவிலை கடந்த கொஞ்ச நேரத்தில் வெங்கடகிரி கோட்டா வந்து சேர்கிறது.
வெங்கடகிரி கோட்டாவில் இருந்து ஆந்திர மாநில நெடுஞ்சாலை. மிக அருமையான சாலை. வழுக்கி கொண்டு ஓடுகின்றது வண்டி.
சற்று தூரத்தில் NE 7 எனப்படும் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பெங்களூரு சென்னை Express High Way துவங்குகிறது.
ஹொஸக்கோட்டெ வரை 75 கிமீ தூரத்திற்கு முதல் கட்டம் முடிக்கப்பெற்று சாலைகளில் வண்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு நேர்த்தியான சாலை சமீபகாலத்தில் வேறு எங்குமே நான் பார்த்ததில்லை. கார்களுக்கு 125 கிமீ வேகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. நல்ல கார் வைத்திருந்தால் 180 டூ 200 வரை கூட முயற்சித்து பார்க்கலாம்.
ஆனால் ஆங்காங்கே ஸ்பீடு செக் போஸ்ட் வைத்திருக்கிறார்கள். ஜாக்கிரதை.
இச்சாலை முழுமையாக்கப்பட்டு சென்னை வரை முடிக்கப்படும்போது வெறும் 3 மணி நேரத்தில் பெங்களூருவில் இருந்து சென்னையை அடையலாம்.
கர்நாடக அரசு கொடுத்த ஒத்துழைப்பை ஆந்திர தமிழக அரசுகள் நிலம் கையகப்படுத்துவதில் தரவில்லை என்னும் குறை மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த 75 கிமீ ஸ்ட்றெச்சை இலகுவாக ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கடந்து விடமுடிகிறது.
பயணத்தின் நடுவே ஹேர்பின் பெண்டுகள் நிரம்பிய
மலைச்சாலை அனுபவத்திற்கும், மனித சஞ்சாரமற்ற வர்ஜின் காடுகளின் ஊடே பயண அனுபவம் பெறவும்,
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு காப்பகத்தை ரசித்தவாறும் அத்துடன் கூட அதிவேக பயண அனுபவத்தை பெறவும் இந்த புதிய பாதையில் ஒரு முறை பெங்களூரு சென்று வாருங்கள் நண்பர்களே.
பாதுகாப்பு கருதி இரவு பயணம் மட்டும் இப்போதைக்கு வேண்டாம்.
Enjoy a great journey–காளி சுதன் சக்தி முத்துக்குமார்

