என்று தணியும் பெண் சுதந்திர தாகம்?

 என்று தணியும் பெண் சுதந்திர தாகம்?
தகவல் யுகத்தில் தடுமாறி நிற்கும்  பெண் அடிமைகளை!!! 
வாருங்கள் இசைப்போம் ஒரு விடுதலை ராகம்!! 
அடுப்பூதும் கைகள் அவனி  ஆள்கிறது—
வளைகரங்கள் வான் அளக்கிறது—
பூட்டி வைக்கப்பட்டவள்   இன்று போட்டி போடுகிறாள்—
கல்வி மறுக்கப்பட்டவள்  கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்துகிறாள்— 
எல்லாமே உண்மை என்றாலும்– எத்தனை சதம்??
ஒன்று—இரண்டு—மூன்று—
மீதப்  பெரும்பான்மையின் நிலை என்ன?
அடிமைகள் !! ஆம் பெண்ணே நாம் அடிமைகள் தான்!!! 
அடிமைகளாய் வாழ்கிறோம் என்பதே அறியாமல்— 
அழகு சிறைகளுக்குள் விரும்பி அமர்ந்திருக்கும் அடிமைகள் நாம்!! 
உதாரணங்கள் சொல்லட்டா!??
பொருள் ஒன்றை விற்க- போகப்பொருளாக; 
கலை என்னும் பெயரில்- காமப் பொருளாக; 
உடலை விற்கும் விளம்பர அடிமைகள்!!! 
பண்பாட்டை சூறையாடி- 
பன்னாட்டு நிறுவன தேவைகளுக்காய்- 
நம் தன்மானத்தை மரத்துப் போகச் செய்யும்- 
தொலைக்காட்சியை தொழுது நிற்கும் அடிமைகள்!!! 
காதலை தேடி- கண்டவனையும் நாடி-
போலியை  உண்மை என்று நம்பி- எடுப்பார் கைப்பிள்ளையாகி- 
ஏமாந்து நிற்கும் அன்பு தேடும் அடிமைகள்!!! 
நல்ல அழகு நடத்தையில் மிளிர்வதே!!!! 
மாறானது   எல்லாம் மாசுற்றதே!! என அறியாது 
உச்சி முதல் உள்ளங்கால் வரை- 
செயற்கை பூச்சுக்களால்- இயற்கை மறந்த- 
எதார்த்தம் துறந்த அலங்கார அடிமைகள்!!! 
மாற்றத்தின் பெயரால் மரபினை துறந்து- 
வளர்ச்சி விளக்கின் விட்டில் பூச்சிகளாய்- 
வாழ்க்கை சூரியனை- 
தொலைத்தொடர்பு மேகங்களுக்குள் தொலைத்துவிட்டு- 
தேட மறந்து மயக்கத்தில் வாழும் நாகரீக அடிமைகள்!!! 
அறிவு, திறமை, ஆற்றல் இருந்தும்- 
அதனால் ஆகப் போவது என்னவென? 
சுயம் அறியாது  சுயநல ,சோம்பல் சேற்றில் சிக்கி- 
சிதைந்து கொண்டிருக்கும் அறியாமையின் அடிமைகள்!! 
அவிழ்க் கப்படவேண்டிய அடிமைகள் தான் எத்தனை எத்தனை?? 
என்னவளே!!! கண் விழித்துப் பார்!!! 
அடிமைத்தனத்தின் முகமூடிகள் தான்  மாறி இருக்கிறதே தவிர- 
நம்மீது திணிக்கப்படும் அடிமைத்தனம் அப்படியேதான் இருக்கிறது!! 
எப்படி இருந்தாலும்- ஆண் அழகு!! 
இப்படி இருந்தால்தான் பெண் அழகு!!- எனும் 
வெற்று வரையறைகளை நம்பியா—
அழகு பூச்சுகளுக்குள் மறைந்து கொள்கிறாய்??? 
அழகு என்பது உன் நளினங்களிலா?? உன்  நடத்தையிலா?? 
ஆணின் தன்மான உணர்வுக்கு ‘ஆண்மை’ என்றும்- 
பெண்ணின் தன்மான உணர்விற்கு ‘தலைக்கணம்’ என்றும் பெயரிட்டு- 
பெண்ணின் ஆளுமையைக் அழிக்கத்துடிக்கும் கயவர்களின் மத்தியிலா- 
அடக்கமெனும் வார்த்தைக்குள் அடங்கி போகிறாய்??? 
வீட்டில் தான் மரியாதை- வீதியில் ஏது  பாதுகாப்பு??? என பயம் காட்டியே 
நம்  போராட்ட நெருப்பிற்கு நீரோட்டம் காட்டும்—
நீசர்களின் வலைக்குள் இன்னுமா  சிக்கிக்  கொண்டிருக்கிறாய்??? 
கண் விழித்துப் பார்!! 
பிறந்த குழந்தைக்கும் பாலியல் கொடுமை- 
நடந்து போகும்போது நகைபறிப்பு- 
காதலித்ததால் கவுரவக் கொலை- 
மறுத்தால்  கழுத்து அறுபட்டு கொலைகள்-
கரையழிப்பு திராவகங்கள் எல்லாம் பெண் உருவழிப்புக்காக- 
ஆண்களைவிட அதிகம் படித்த பிறகும், 
அதிகாரம் செலுத்தும் இடங்கள் எதிலும்  பெண்களை காணவில்லை!!! 
இப்படி பெண்கள் மட்டுமே சந்திக்கும் கொடுமைகளுக்கு 
பெண்ணையன்றி – உன்னையன்றி யார் போராட வருவார்?? 
செத்த மாட்டை தொட்டால் கூட செத்துவிழும்  நம் நாட்டில்- 
வன்புணர்விற்காய்  பெண்ணை தொட்டவர் எல்லாம்- 
சட்டத்தின் துணையோடு சுதந்திரமாய் சுற்றுகிறார்கள். 
நமக்கான நீதியை நம்மையன்றி யார் கேட்டுப் பெறுவது? 
முகநூலில் முகம் தொலைத்து-
கீச்சகத்தில் குரல் அழித்து- 
அழகுச்  செயலிகளில் புறம் மறைத்து- 
அயோக்கியர்களிடம் அகம் இழந்து- 
படவரியில்  நேரத்தை அடகு வைத்து- 
நம் உண்மை ஆற்றல் உணராமல்- 
அடிமைப்பட்டுக் கிடந்தது போதும்!!! 
இனியேனும் விழிக்க விட்டால் 
நம்மை நாமே மன்னிக்க முடியாமல் போகும் நாளும் வரும்!! 
அந்த நாளுக்கு முன் *உண்மை உரிமையை மீட்டெடுக்க-
ஒருங்கிணைவோம் வாருங்கள்!!!* 
அதுவரை தணியாது  தொடரட்டும்  நம் சுதந்திர தாகம்!!!!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...