அரவிந்த் கெஜ்ரிவால் மனு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கலால் கொள்கை வழக்கில், தனது மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில், தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீது நடந்த முதல் விசாரணையின் போது ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த ஏப். 9 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது.
இதனையடுத்து கடந்த ஏப். 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.