வெளியானது GOAT பட ரிலீஸ் தேதி..!
வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்திருப்பதன் காரணமாக எந்த மாதிரியான படமாக GOAT வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷெட்யூலில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே படத்தில் பாக்கியிருப்பதாக கூறப்படும் சூழலில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், யோகிபாபு, பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் GOAT அந்த நிறுவனத்துக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. பிறகு தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஷூட் செய்யப்பட்டு கடைசியாக கேரளாவுக்கு சென்றது படக்குழு. அங்கு விஜய்க்கும், வெங்கட் பிரபுவுக்கும் உச்சக்கட்ட வரவேற்பை அளித்தார்கள் கேரள ரசிகர்கள். அதனைப் பார்த்து ஒட்டுமொத்த மல்லுவுட்டும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கேரள ரசிகர்கள் மத்தியில் விஜய் உரையாடவும் செய்தார். அந்தப் பேச்சும் பெரும் ரெஸ்பான்ஸை பெற்றது.
படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. இந்நிலையில் GOAT படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது. இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இன்றைய அறிவிப்போடு படக்குழு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில் விஜய் கண்ணாடி போட்டுக்கொண்டு செம க்யூட்டாக காணப்படுகிறார்.
முன்னதாக, GOAT படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று தகவல்கள் தீயாக பரவின. ஆனால் அதெல்லாம் இல்லை இது முழுக்க முழுக்க ஒரிஜினல் கதைதான் என்று வெங்கட் பிரபு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் ஓடுகின்றன. பொதுவாக டைம் ட்ராவலை மையமாக வைத்து வரும் படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே விஜய்யும் அவரது ரசிகர்களும் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். ஏனெனில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. எனவே இந்தப் படத்தை விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெஸ்ட்டாக கொடுத்துவிட வெங்கட் பிரபுவும் பொறுப்புணர்வுடன் தீயாக வேலை செய்துவருகிறாராம். படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று வெங்கட் பிரபுவும் தெரிவித்திருப்பதால் கண்டிப்பாக ஒரு ட்ரீட் இருக்கிறது. மெகா ஹிட் பார்சல்தான் என தளபதி ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.