“வற்றாத ஆச்சரியம்”.

சுஜாதா 2003-04 காலப்பகுதியில் அம்பலம் எனும் இணைய இதழில் “ஓரிரு எண்ணங்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை உயிர்மைப் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இதில் தமிழ் மொழி, கணினி, இணையம், தொழில் நுட்பம், சினிமா, ஸ்ரீரங்கம், சங்க இலக்கியம், கலை, வாழ்க்கை, சமூகம், போன்ற பல சப்ஜெக்ட்கள் அவரால் அலசப் பட்டுள்ளன. திருக்குரான், பிரபந்தம், ராகங்கள், அறுபத்து மூவர், தவிர வானத்துக் கோள்கள், கிராபிக்ஸ், கம்பர், சாவி, டி.கே.சி, அகநானூறு, புறநானூறு போன்ற தலைப்புகளிலும் அவர் விவாதிக்க தவறவில்லை. ஒவ்வொன்றையும் அவர் மேலோட்டமாக பேசி விட்டு போகவில்லை. சில கட்டுரைகள் ஒரு பக்க அளவில் இருந்தாலும் அந்தந்த விவாதப் பொருளின் ஆழத்துக்கு அழைத்து சென்று அதே நேரம் படிப்பவர்களுக்கு மூச்சு திணறாதவாறு விளக்கம் கொடுத்துள்ளது அவரது தீர்க்கமான அறிவுக்கு எடுத்துக் காட்டாக அமைகிறது. சாதாரணமாக புரியாத சில பொருளில் விவாதம் செய்தாலோ அல்லது அந்த பொருளை பற்றி விரிவாக பேசினாலோ படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டும். விஷயம் தெரிந்து கொள்ள விரும்புவோர் இதிலிருந்து விலக்காக இருக்கலாம். ஆனால் என்னைப் போல பாமர மக்களுக்கு நிச்சயம் புரியாத விஷயங்களில் அவ்வளவு ஈடுபாட்டை ஏற்படுத்த முடியாது. ஆனால் அவர்களையும் அந்த விஷயங்களைப் படிக்க வைக்கக் கூடிய எழுத்து வன்மை பெற்றிருந்தார் சுஜாதா என்றே சொல்ல வேண்டும்.

கட்டுரைகளில் சுஜாதா தம் எழுத்து நடையில் ஆங்காங்கே கொண்டு வரும் மெலிதான நகைச்சுவையை ரசிக்காமல் இருக்க முடியாது. இதற்கு உதாரணமாக “ஸ்ரீரங்கத்தை தேடி” என்னும் ஒரு கட்டுரையில்

“ரங்கவிலாசத்தில் நகர இடமில்லாமல் கடைகள் இரண்டு பக்கமும் அடைத்துக் கொண்டுள்ளன. என் மனைவி வெண்கல விக்கிரகம் ஒன்று வாங்கினாள். கடைக்காரர் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சொன்னார். “ஸார் யாரு தெரியுமில்ல. புஸ்தகத்தில் எழுதிடுவார்” என்று கூட வந்தவர் சொன்னதும் இருபத்தைந்து பைசா குறைத்துக் கொண்டார்” என்று எழுதியிருப்பார். இதில் பாருங்கள் இப்படி எழுதுவதால் மக்கள் இவர் எழுத்துக்கு இவ்வளவுதான் மதிப்பு தருகிறார்கள் போலும் என்று படிப்பவர்கள் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்ற கவலை எல்லாம் இல்லாமல் யதார்த்தத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதுதான் அவருடைய தனித்துவம்.

சினிமா விருதுகள் பற்றிய கட்டுரையில் “சினிமா அவார்டு வழங்கும் நிகழ்ச்சிகளில் விருது பெறும் நடிகைகள் கட்டாயம் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட வேண்டும். இதில் அவர்களுக்கு எதுவும் சிரமம் இல்லை. நடனத்தில் முக்கால் வாசியை துணை நடனமணிகள் வேர்க்க விறுவிறுக்க ஆட இவர்கள் குறுக்கே நடந்து வந்து கையை காலை இரண்டு முறை உதறினாலே போதும். தப்புகள் சைக்கடெலிக் விளக்குகளில் யாருக்குமே தெரியாது. விருது அறிவிக்கும் போது விருது பெரும் நடிகைகள் ஆச்சரியப்பட்டது போல நடிக்க வேண்டும். மேடையைத் தொட்டுக் கும்பிடலாம். பெண்கள் அத்தனை பேரும் கட்டாயமாக தலை விரித்துக் கொண்டு அவ்வப்போது தள்ளி விட்டுக் கொள்வது கட்டாயம்” என்று எழுதியிருப்பார். இந்த நிகழ்ச்சிகளை பெரும்பாலானவர்கள் பார்ப்பதற்கும் சுஜாதாவின் பார்வைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்.

மற்றொரு கட்டுரையில் பழந்தமிழ் இலக்கண நடையில் இருக்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை எளிய தமிழில் விளக்கம் அளித்து புறநானூற்றுப் பாடல்கள் ஒவ்வொன்றும் வற்றாத ஆச்சரியம் என்று வர்ணித்திருப்பார். இதில் வரும் ஒரு சில தமிழ்ப் பாடல்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

சுஜாதா தன் மேல் வைக்கப் படும் விமர்சனங்களையும், தனக்கு தமிழ் எழுத்தாளர் சமுதாயத்தில் கிடைக்காத சரியான அங்கீகாரத்தையும் எப்படி எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து போயிருக்கிறார் என்பதை அவர் ஒரு கட்டுரையில் விளக்கி இருப்பதைப் பாருங்கள்:-

“விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரையும் நேரில் சந்தித்து பேசும் போது என் கதைகளைப் படித்திருப்பதும் அவைகளில் பலவற்றை ஞாபகம் வைத்திருப்பதையும் அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் ஒரு இலக்கியக் கூட்டத்திலோ பொது மேடையிலோ பங்கேற்கும் போது மிகக் கவனமாக சுஜாதா என்கிற பெயரை ஒரு “தீட்டு” போல தவிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். இதன் காரணம் லேசாகப் புரிவதால் எனக்கு இதில் வியப்போ, வெறுப்போ இல்லை. இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள் எனக்கு ஓரளவு பரிச்சயமானதே” என்று எழுதியிருப்பார்.

மூத்த விமர்சகரான க.நா.சு கூட ஒரு காலகட்டத்தில் சுஜாதாவை புகழ்ந்து இவர் பிற்காலத்தில் பெரிய அளவில் வருவார் என்றெல்லாம் சொல்லி விட்டு பின்பு அவருடைய அந்த விமர்சனத்துக்கு ஏதோ சிலரால் கண்டனங்கள் எழ சுஜாதாவை கூட்டங்களில் எங்காவது கண்டால் கூட க.நா.சு கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு வெளியே ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்ததாக எழுதியிருக்கிறார். புறக்கணிப்பு என்பது அவரது வாழ்க்கை அத்தியாயத்திலும் நிகழ்ந்திருக்கிறது எனும்போது அந்த ஜாம்பவானின் அனுபவத்தை ஒப்பிடும்போது நம்முடைய புறக்கணிப்பு அனுபவங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும் ஒரு சிலர் தன்னை ஒரு பெரிய எழுத்தாளராக நினைத்துக் கொண்டு தன்னுடைய எழுத்துக்களை படிக்க ஒரு பெரிய வாசகர் வட்டமே காத்துக் கொண்டிருப்பதாக கற்பனையும் செய்து கொண்டு செய்யும் அலப்பறைகளை பார்க்கும் போது சுஜாதா எனும் இமயத்தின் முன் இவர்கள் எல்லாம் வெறும் மண்குவியல்கள் என்பதை புரிய வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சுஜாதாவின் வார்த்தைகளிலேயே அவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால் அவர் ஒரு “வற்றாத ஆச்சரியம்”.

-ராஜசேகரன் ராஜூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!