தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை : கர்நாடக அரசு திட்டவட்டம்..!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவையை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கு முன்னர் கடைசியாக பிப். 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்று இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 3.5 டிஎம்சி நீரையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் வழங்கக் கோரி கர்நாடக அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடகத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்னை நிலவுவதால் தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், தண்ணீர் இருப்பு மற்றும் மற்ற சூழலைக் கருத்தில் கொண்டுதான் தண்ணீர் திறக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.