புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு..!
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இதையடுத்து, இயேசு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த புனித வெள்ளியை துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
தவக்காலத்தின் தொடக்கமாக கடந்த 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மார்ச் – 29 ) புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மாலை 5.30 மணியளவில் இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
புனித வெள்ளியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே 2000
ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஏசுவின் சிலுவை பாடுகளை மனிதர்கள் தத்திருபமாக
நடித்து தியானித்து திரு சிலுவை பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்ட பேரவை குழு தலைவர் ராஜேஷ்குமார் உட்பட தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சியில், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய, சிலுவையை சுமந்தபடி அழைத்துச் செல்வதையும் அவரை காவலர்கள் ரத்தம் சொட்ட சொட்ட சித்தரவதை செய்வதையும் தத்ரூபமாக சித்தரித்தபடி, ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி நெடுங்குணம் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் சேத்துப்பட்டு லூர்து நகர், நிர்மலா நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதையடுத்து, வருகிற 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.