ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர். பம்பரம் சின்னம் பொதுவான சின்னங்கள் பட்டியலில் உள்ளதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது பம்பரம் சின்னம் பொதுச்சின்னமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும், ம.தி.மு.க., விண்ணப்பத்தின் மீது இன்று (மார்ச் 27) காலை முடிவெடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதிமுக.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது . இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛ வேறு மாநிலத்தில் போட்டியிடுகிறோம். இதை கருத்தில் கொண்டு ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் ” என வாதிட்டார். இதற்கு விளக்கமளித்த தேர்தல் ஆணையம் தரப்பு, ‛‛ ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் ” எனக்கூறியது.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்லை, ‛‛ ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. ஒரே தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.,வுக்கு பொதுப்பட்டியலில் இல்லாத ‛பம்பரம்’ சின்னத்தை ஒதுக்க சட்ட விதிகள் இல்லை. ஒரே மாநிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே ‛பம்பரம்’ சின்னத்தை ஒதுக்க முடியும். ம.தி.மு.க., 2010ல் அங்கீகாரத்தை இழந்துவிட்டது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், இந்த வழக்கில் தீர்வு காண இயலாது” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.