எங்கள் ரத்தத்தின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லையா?
தாய் வயிற்றில் –
பனிக்குட நீரில்-
பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை-
பீறிக்கிழிக்கப்பட்டு-
தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து-
தலைகீழாக அடிக்கப்பட்டு –
சிந்திச் சிதறிய அந்த குழந்தை இரத்தம்
குமுறி அழும் குரல் கேட்கவில்லையா?
பாருலகில் பட்டொளி வீசிட –
பள்ளிக்கு படிக்க சென்ற
சிட்டுக்குருவிகளாம் சின்னஞ் சிறார்கள்-
ஆலயம் போன்ற ஆரம்ப பள்ளியிலேயே-
அணுகுண்டின் அணுப்பிளவில்
தேகம்பிளந்து கிடக்க-
தேங்கிய இரத்தத்தின் சப்தம் கேட்கவில்லையா?
முலைகள் முகிழ்க்கும் முன்னரே
காமுகர்களின் கையில் சிக்கி-அந்த
வெறிபிடித்த வேட்டை நாய்களின்
வெறித்தனதிற்கு பலியாகி-
பிஞ்சு உடல் சிதைக்கப்பட்டு- உயிரிழந்த
உத்தம பெண் வாரிசுகளின்
இரத்தத்தின் சப்தம் கேட்கவில்லையா?
தன் இன தமிழரின் தன்மானம் காக்க-
மாக்களாக நடத்தப்பட்ட மக்களின் மனிதம் மீட்க-
உயிர் வாழ்வதற்கான உரிமையை பெற்றுக்கொள்ள-
துணிந்து போராடிய போராளிகள்
கொடூரமான முறையில்
கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது
அர்ப்பணித்த இரத்தத்தின் சப்தம் கேட்கவில்லையா?
அன்னை பூமியே !
எத்தனை நாள் பொறுத்திருப்பாய் நீ ?
அகழ்வாரைத் தாங்கும் நிலம் நீ—
அக்கிரமங்களையும் தாங்க பழகிக்கொண்டாயோ?
வெள்ளையரின் சுயநலத்தாலும் சூழ்ச்சியாலும்
கொல்லப்பட்ட செவ்விந்தியர்கள்;
காலனி ஆதிக்கத்தில்
காலணிகளை விட கேவலமாய் நடத்தப்பட்டு
மாண்டுபோன
ஆப்பிரிக்க அடிமை மனிதர்கள்;
சர்வாதிகார ஆட்சியில்
அநியாயமாய் கொல்லப்பட்ட யூதர்கள்;
உலகப் போர்கள், கலகங்கள்,
பசி பட்டினியால் இறந்த எண்ணற்ற அப்பாவிகள்– என
விடாது தொடரும் மனித மரணங்களால்
மரத்துப்போனாயோ நீ ??
அறச்சினம் கொள்ள வேண்டிய போதும்
அமைதி காத்தமைக்காக பிராயச்சித்தம் செய்துவிடு!!!
உரிமைக்காக உயிரிழந்தோரின்
இரத்தத்தில் குளித்த தாயே!!!
மனிதர்கள் மரத்துப் போனார்கள்—
மண்ணாகி கல்லாகி போனார்கள்-
எனவேதான் உன்னைக் கேட்கிறோம்,
நீயாவது உணர்வு பெற்றிடு !!!
சொந்த இனம் அழிந்து கொண்டிருக்கும் போதும்
சுணங்கிக் கிடந்த தன்மானங் கெட்டவர்களுக்கு
நீயாவது பாடம் புகட்டிடு!!!
காலம் கடந்துகொண்டிருக்கிறது!!!
சொந்த இனம் எங்களை மறந்து விட்டது,
வரலாறும் கூட எங்களுக்கு
வழி அனுப்பும் மடல் வாசிக்கும் முன்பு
எங்கள் இரத்தத்தின் சத்தத்திற்கு பதில் கொடு!!!