நான் ஒரு பெண்!!!
நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!!
நான் ஒரு பெண்
மாதவம் செய்தல்ல – எப்பிறப்பில் செய்த
மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே – நான் ஒரு பெண்!!
பெண்ணாய் பிறந்த ஒரே ஒரு பெரும் குற்றத்திற்காக,
எனக்கு மட்டுமாய் இந்த சமூகம் எழுப்பிவைத்திருக்கும்
இரும்புச்சங்கிலிகளின் முரட்டுப் பிடியில்
மூச்சு முட்டிப்போய் நிற்கிறேன்!!
அன்றாடமும் அஞ்சி அஞ்சியே அழிந்துவிடுமோ – என
வெஞ்சினம் கொண்டு இதை எழுதுகிறேன்.
ஆம்!! அன்றாடமும் அச்சத்தோடுதான் வாழ்கிறேன் நான்!!
அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டிருக்க,
இந்த 21ம் நூற்றாண்டிலும் – பெண் என்பதால் மட்டுமே
நான் அச்சத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பிறந்தது பெண் குழந்தை என்று அறியவரும் அந்த நொடி-
‘பொம்பள புள்ளையா?
இன்னைல இருந்து புருஷனும் பொண்டாட்டியும் சொத்து சேக்க ஆரம்பிச்சுருங்க’என
அன்பான உறவாய் அன்றி – அழுத்தும் சுமையாய்,
நான் பார்க்க ஆரம்பிக்கப்படும் அந்த நொடிக்காய் அஞ்சுகிறேன்!!
பால்வேறுபாடு கூட அறியாத – பச்சிளம் வயதிலேயே –
‘பொம்பள புள்ள! இப்படியா இருப்பாங்க?? இப்படித்தான் இருக்கணும்!! என்று
என் எதார்த்தத்தை முளையிலேயே கிள்ளி விட்டு,
அதுவாக அல்ல, இதுவாகத் தான் வளர வேண்டுமென
கட்டாயப்படுத்தபடுவதை எண்ணி அஞ்சுகிறேன்!!
உளமுதிர்ச்சி அடையும்முன்னரே உடல்முதிர்ச்சி அடைந்து விட்டால் கூட –
அதையே எனக்கான எல்லையாய் கருதி –
‘பொம்பள புள்ள’ என்ற பதத்தை அப்படியே
‘வயசு புள்ள’ என்ற பதமாய் மாற்றி —
என் உள உலகியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் –
முட்டாள்தனத்திற்கு பயந்து அஞ்சுகிறேன்!!
வயது வரும் முன்னரே- ‘எப்ப கல்யாணம்?’
ஓராண்டு முடியும் முன்னரே – ‘விசேஷம் ஒண்ணும் இல்லையா?’ -எனும்
பழமையில் ஊறிய பண்பாடற்ற கேள்விகளால் –
யாரோ விரட்ட எதையோ நோக்கி ஓடுவதான –
அந்த குழப்ப நிலைக்கு பயந்து அஞ்சுகிறேன்!!
குடும்பம் குழந்தை என்றானபிறகு – அவர்கள் எல்லாம் –
அவர்கள் தனித்தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்த பிறகும் கூட –
நான் மட்டும் அவர்களுக்காய் ஓடிக்கொண்டிருக்கும் –
இலக்கில்லா என் நிலைக்காய் அஞ்சுகிறேன்!!
இவை எல்லாம் மீறி- குடும்பத்தடை எல்லாம் தாண்டி- வெளியில் வந்தால் –
அய்யய்யோ!!!
பெண்ணை தன்னை போன்ற மனித படைப்பாக அல்ல – மாறாக
அவளை ஒரு சதைப்பிண்டமாக மட்டுமே கருதி –
அங்கங்களை மேயும் காமாலைக்கண்கள் !!
உரசிச்செல்லும் உறுத்தலற்ற உடல்கள் !!
எங்கேனும் தொட்டுவிட முயலும் கட்டுப்பாடற்ற கைகள் !!
பெண் அங்கங்களை கெட்ட வார்த்தையாய் –
பயன்படுத்தும் கேடுகெட்ட வாய்கள்!! என
எங்கும் நிறைந்திருக்கும் – ஆபாச அசிங்கங்களுக்காய் அஞ்சுகிறேன்!!!
இதோடு முடிவதில்லை என அச்சத்திற்கான ஆதாரங்கள்!!
தனியே பயணிக்க – தயக்கமின்றி அந்நியரை எதிர்கொள்ள-
உடையை தேர்வு செய்ய – உள்ளதை உள்ளபடி பேச – இன்னும்
குனிய- நிமிர- உட்கார- எழும்ப- அவருக்கு- இவருக்கு- அதற்கு- இதற்கு- என
நான் அஞ்சுவதற்கான காரணங்களுக்கு முடிவே இல்லை!!!
ஒரு பெண் என்பதால் மட்டுமே-
நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு தான் என்ன?
சமூகத்தின் ஒட்டுமொத்த முடிவு சாத்தியமா?? சந்தேகம் தான்!! ஆனால் –
உங்கள் வாழ்வில் தொடர்புடைய –
இந்த அச்சங்களை தினம்தினம் சந்தித்துக் கொண்டிருக்கும்
அந்தப் பெண்களுக்காய் – அவர்களின் அச்சங்களை குறைக்க-
என்ன முடிவு எடுப்பீர்கள்???
கேள்வியுடன் உங்களில் ஒருத்தி!!!!!!
– ஆரா அருணா