ஆக்ராவின் பெயரை மாற்ற உத்தரப்பிரதேச அரசு திட்டம்!
ஆக்ரவன் என்ற பெயர்தான் ஆக்ரா என மருவியது. ஆக்ரவன் என்றால் வனத்தின் முகப்பு எனப் பொருள் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் பெயரை ஆக்ரவன் என மாற்ற அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. அதாவது ஆக்ரா மாநிலம் முன்பு ஆக்ரவன் என்றே அழைக்கப்பட்டு வந்ததாகவும், காலப்போக்கில் இது ஆக்ரா என மாறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதன் பெயரை ஆக்ரவன் என்றே மாற்றலாமா என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யோகி ஆதித்யாநாத் முதல்வராக பதவியேற்றது முதல் சில ஊர்களின் பெயரை மாற்றி வருகிறார்.
இதற்கு முன்பாக முகல்சாராய் நகரை தீனதயாள் உபத்யாயா நகர் என்றும், அலகாபாத்தை பிரக்யாராஜ் என்றும், ஃபைஷாபாத் மாவட்டத்தை அயோத்யா என்றும் மாற்றினார்கள். இதேபோல் லக்னோவை, தாஜ் நகர் பெயர் மாற்றவேண்டும் என்றும் கூறப்பட்டுவந்தது.
சமிபத்தில் மறைந்த பாஜக எம்.எல்.ஏ ஜகன் பிரசாத் கர்க், சென்ற ஆண்டு முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ஆக்ரா மாவட்டத்தை ஆக்ரவன் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தற்போது ஆக்ரா பல்கலைக்கழகத்திற்கு, வரலாற்றில் ஆக்ரவன் என அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்ய அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில், ஆக்ரா என்பது ஆக்ரவன் என்றப் பெயரில் இருந்து மருவி வநதுள்ளது. ஆக்ரவன் என்றால் வனத்தின் முகப்பு என்று அர்த்தம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உ.பி. பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர், “வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியருமான சுகம் ஆனந்த் இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். விரைவில் அவர் தனது முழு அறிக்கையும் வெளியிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.