ஆபாசம் என்பது
அவ்வையார் துவங்கி காரைக்கால் அம்மையார் வரை, தமிழில் பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருந்து உள்ளனர். என்றாலும், இடைப்பட்ட காலத்தில் பெண் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு, பெண் கல்வி மறுப்பு, எழுத்தை முடக்குவது உள்ளிட்ட, ஆணாதிக்கம்
சார்ந்தவையே காரணங்கள்.
தற்காலத்தில், திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்கள், பெண்களின் உணர்வுகளை போலியாக வெளிப்படுத்தி, அவற்றையே பெண்களுக்குள்ளும் கட்டமைத்து வருவதால், பெண் சார்ந்த அடையாளங்கள் மறுக்கப்படுகின்றன. அடையாளங்கள் வேறுவிதமாக பார்க்கப்படுகின்றன.
அதனால், பெண்களின் இயக்கம், சிந்தனை, வாழ்க்கை உள்ளிட்டவற்றை, அவளின் அனுபவங்களால், அவளின் மொழியிலேயே பேச வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால் தான், தற்போது பெண்ணிய எழுத்துக்களுக்கு முக்கியம் உள்ளது.
பெண்ணின்
அடையாளம் என்ன, அவள் போராட வேண்டியது எதற்காக, அவளின் அனுபவங்களையோ, மற்ற பெண்களின் அனுபவங்களையோ கொண்டு அவள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும், அறிவு சார்ந்த சூழலுக்கு எவ்வாறு, தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பனவற்றை பெண்ணிய இலக்கியங்கள் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றன.
பெண்ணின் மனதளவிலான
சுதந்திரம் என்பது என்ன, பூசி மெழுகாத அவளின் உண்மையான
உணர்வுகள் என்னென்ன என்பனவற்றை, பெண் மொழியில் பெண்களிடத்தில் படைப்புகளின் வழியாக கொண்டு செல்லும்போது, அவள் சுயசிந்தனை பெறுகிறாள்.
ஆண்கள், பெண்ணிய படைப்புகளை படிக்கும் போது, பெண்களை புரிந்து கொண்டவர்களாக, அவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர்களாக மாறுகின்றனர். காலம் காலமாக, ஆண்கள் மீதும் பெண்களின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கும், போலி அடையாளங்கள் கட்டுடைக்கப்படுகின்றன.
ஆண்களும், பெண்களும் போலியில்லாத பெண்ணுலகை புரிந்து கொள்வதன் மூலம், இல்லங்களில், இலகுவான வாழ்க்கை ஏதுவாகின்றது.
தற்காலத்தில், பெண்ணியம் சார்ந்த தமிழ் படைப்புகள் அதிகம் வரவேற்கப்படுகின்றன என்பது, ஆரோக்கியமான விஷயம். என்றாலும், பெண்ணியம் சார்ந்த கருத்தாக்கங்களின் மீது வைக்கப்படும் விமர்சனமாக இரண்டுவிஷயங்களை சொல்லலாம்.
குடிப்பது, புகைப்பது, பொதுவெளியில் கூச்சலிடுவது, அரைகுறையாக உடுத்துவது உள்ளிட்டவையே பெண்ணியம் பேசுவோரின் தகுதிகள் போன்ற பிம்பத்தை, ஊடகங்கள் முன்னிறுத்த முயற்சிக்கின்றன. பெண்ணியம் பேசுவோரில் சிலரின் தனிப்பட்ட விஷயங்களாக அவை இருக்கலாம். அவற்றை பொதுமைப்படுத்துவது முறையல்ல என்பது, என் கருத்து.
அதே போல், பெண்ணியம் பேசும் எழுத்தாளர்கள், ஆபாசமாக எழுதுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை, நான் மறுக்கிறேன். மனிதனின் உடல் உறுப்புகளுக்கு, தனித்தனி பணிகள் இருப்பதை போலவே, அவற்றிற்கு தனித்தனி பெயர்களும் இருக்கின்றன.
அதில், ஆண் உறுப்புகளை ஒரு மாதிரியும், பெண் உறுப்புகளை வேறு மாதிரியும் பார்க்கவும், பேசவும் கற்றுக்கொடுத்தது, இடைக்கால சமூகம். உறுப்புகளின் பெயர்களில் ஆபாசம் என்பது ஏதும் இல்லை என்பதே என் கருத்து.
பெண்ணின் மார்பு, குழந்தைக்கு பாலுாட்டும், புனிதமான பணியை செய்யும் அற்புதமான ஓர் உறுப்பாக கற்பிக்காமல், அதனை பாலியல் வக்கிரமாகவும், ஆபாசமான உறுப்பாகவும் பார்க்க கற்றுக்கொடுத்தது சமூகத்தின் குற்றம். அதனைப் பற்றி, வெளிப்படையாக, அவள் சார்ந்த சமூகத்திற்கு எழுதுவதை ஆபாசம் என்பது சரியல்ல.
பொது இடத்திலோ, தனிப்பட்ட முறையிலோ, அடுத்தவர்களின் மனம் புண்படும்படியாக நடந்துகொள்வது மட்டுமே என்னை பொறுத்தவரை ஆபாசம்.
-கவிஞர் சல்மா
நன்றி: தினமலர்