ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று

 ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று

ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று😢

அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜனின் சுருங்கிய வடிவம் தான் ஏ.பி.நாகராஜன்.

டி.கே.எஸ் உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடித்து, திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, கதை வசனம் எழுதிப் பிறகு சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களில் பணியாற்றிவர் ஏ.பி.என்.

பாவை விளக்கு துவங்கி நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், ராஜராஜசோழன், நவரத்தினம் என்று பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன் 1953ல் நால்வர் என்னும் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும்..கதைவசனகர்த்தாவாகவும் அறிமுகமானவர்.பின் அவர் நீண்டகாலம் மக்களால் நால்வர் நாகராஜன் என்றே அழைக்கப்பட்டார். பின்னர் அவர் நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார்.லக்ஷ்மி பிக்ஷர்ஸ் என்னும் அவர்கள் நிறுவனத்திலிருந்து நாகராஜன் கதை வசனத்தில் நல்ல இடத்து சம்பந்தம்,வடிவுக்கு வளைகாப்பு ஆகிய படங்கள் வந்தன.

மக்களைப் பெற்ற மகராசி என்னும் படம் மாபெரும் வெற்றி படமாய் நாகராஜனுக்கு அமைந்தது. பின் ஏ.பி.என்., தனியே விஜயலட்சுமி பிக்சர்ஸ் ஆரம்பித்து 1964ல் சிவாஜியின் நூறாவது படத்தை கதை,வசனம் ,இயக்குநர் பொறுப்பேற்று வெளியிட்டார்.மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் ‘நவராத்திரி’.இதில் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்தார்.

அடுத்து சில ஆண்டுகள் ஏ.பி.என்., காட்டில் மழைதான்.

தொடர்ந்து வெள்ளிவிழா கண்ட திருவிளையாடல்,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,சரஸ்வதி சபதம்,தில்லானா மோகனாம்பாள்,கந்தன் கருணை (ஏ.எல்.எஸ் தயாரிப்பு)ராஜ ராஜ சோழன் என வெற்றி படங்கள்.அனைத்திலும் சிவாஜி பிரதான பாத்திரம் ஏற்றிருப்பார்.

இதில் ஒரு சுவையான சம்பவம் ஃப்ரம் கட்டிங் கண்ணையா

‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதையைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி “என்னண்ணே சடாமுடி எல்லாம் வைச்சுக்கிட்டு நான் சிவனா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா?” என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டாராம். அதற்குப் பதில் அளித்த நாகராஜன் “நீங்கள் இந்தப் படத்தில் நடித்த பின் நீங்கள் தான் சிவன் என்று மக்கள் நிச்சயம் சொல்வார்கள். அப்படிச் சொல்லலைன்னா நான் திரைப்படத்துக்குக் கதை எழுதுறதையும், திரைப்படம் எடுக்கிறதையும் விட்டு விடுகிறேன்” என்றாராம்.

திருவிளையாடல் படத்தில் நக்கீரராக நடிகர் எஸ்வி.ரெங்காராவ் அவர்களை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் ஏ.பி.என் முதலில் நினைத்தாராம். அவர் ஒரு சிறந்த நடிகர் தான் என்றாலும், அந்தப் பாத்திரத்தில் நன்கு தமிழ் பேசி நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்ததால் அதனைக் கைவிட்டாராம். அடுத்து நக்கீரராக நடிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தாராம். அதில் ஒரு விஷயம். கவியரசர் நன்றாகத் தமிழ் பேசுவார். ஆனால் அதில் ஒரு கம்பீரம் இருக்காது என்று அந்த முடிவையும் கைவிட்டாராம். இறுதியில் சிவாஜி நாடக மன்றத்தைச் சேர்ந்த நடிகர் தங்கராஜ் என்பவரையே நடிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. திருவிளையாடல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்தது.

மறு நாள் நக்கீரரும், சிவ பெருமானும் நடிக்க வேண்டிய காட்சி படம் பிடிக்கப்பட வேண்டும். அதற்கு முதல்நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் ஏ.பி.என் அவர்களை அழைத்து “அண்ணே… நக்கீரராக நீங்களே நடிச்சிருங்க… அது தான் நல்லா இருக்கும்” என்றாராம். அதற்கு இயக்குநர் நாகராஜன் “நான் நடிப்பதை விட்டு ரொம்ப நாளாச்சு. இப்பப் போய் நடிக்க வேண்டுமா?” என்றாராம். அத்துடன் அதில் நடிப்பதற்கு தங்கராஜ் அவர்களை முடிவு பண்ணியாச்சே… அவரே நடிக்கட்டுமே…” என்றாராம்.

ஆனால் நடிகர் திலகம் சிவாஜி அதற்குச் சம்மதிக்க வில்லை. “நீங்கள் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும்” என்றாராம். அப்போதும் நடிப்பதற்கு நாகராஜன் தயங்கினாராம். படப்பிடிப்பு முடிந்து சிவாஜி அவர்கள் வீட்டுக்குப் போவதற்கு அவருடைய சீருந்தில் ஏறிவிட்டாராம். ஏறியவுடன் நாகராஜனைப் பார்த்து “அண்ணே.. நாளைக்கு நீங்க நக்கீரராக நடிப்பதாக இருந்தால் தான் நான் சிவனாக நடிப்பேன். இல்லாவிட்டால் நான் நாளை படப்பிடிப்புக்கு வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டாராம். அதன்பின் ஏ.பி.நாகராஜன் அவர்களே நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு தானே நக்கீரராக நடிப்பது என்று முடிவு எடுத்தாராம்.

தவிர்த்து..மற்ற நடிகர்கள் நடித்த, வா ராஜா வா,கண்காட்சி,அகத்தியர்,திருமலை தென்குமரி, குமாஸ்தாவின் மகள், மேல் நாட்டு மருமகள் ஆகிய படங்கள் வந்தன.

கடைசியாக 1977ல் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து நவரத்தினம் படத்தையெடுத்தார்.

நன்கு படங்களில் சம்பாதித்து..சம்பாதித்த பணத்தை திரையுலகிலேயே இழந்த ஏ.பி.என் இதே நாளில்தான் காலமானார்.,

BY The Desk of கட்டிங் கண்ணையா

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...