என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்.

 என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்.

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..!

அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது..! கடைசியாக சுஜாதா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் இதற்கு முன்பாகவும் ஒரு முறை அவர் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் தோன்றியிருந்தார். அது நடிகர் திலகம் சிவாஜியின் மரணத்தின்போது..

சிவாஜியின் உடல் தகனம் நடைபெற்ற நாளன்று காலையில் பாண்டிபஜார் அருகே இருந்து தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சிவாஜியின் வீடு நோக்கி நடந்து வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் முன் வரிசையில் மனோரமாவுடன் கைகோர்த்து தலையைக் குனிந்த நிலையிலேயே சுஜாதா வந்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் வீட்டு முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உடலுக்கு மாலை அணிவித்த கையோடு பட்டென்று சிவாஜியின் வீட்டுக்குள் சென்று பதுங்கிவிட்டார் சுஜாதா. அவரிடத்தில் இரங்கல் செய்தி கேட்பதற்காக அனைத்து சேனல்காரர்களும் சிவாஜியின் வீட்டைச் சுற்றிச் சுற்றி தேடியலைந்ததை நேரில் கண்டேன்..!

சில நடிகர், நடிகைகள் லாரியில் சிவாஜியின் உடலுக்குப் பின்னால் சென்றபோதாவது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர் வெளியில் வரவே இல்லை..!

“கண்ணிலே என்னவென்று கண்கள்தான் அறியும்..!

கையிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..?

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்..?”

– இப்படி அவள் ஒரு தொடர்கதையில் தனக்கான கேரக்டரில் பாடிய சுஜாதா, நிஜத்திலும் அவர் யார் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சூழலையே உருவாக்கி வைத்திருந்தார்..! ஆனால் இது அத்தனைக்கும் பத்திரிகையாளர்கள் குற்றம் சொல்வது அவரது கணவரைத்தான்.

சுஜாதா நடிக்கின்றவரையிலும் அவரது கால்ஷீட்டை அவரது கணவர் ஜெயகர்தான் கவனித்துக் கொண்டார். ஜெயகரையே போனில் பிடிப்பது மகா கஷ்டம். சுஜாதாதான் நடிக்க வேண்டும் என்றாலே தயாரிப்பு நிர்வாகிகள் அலுத்துக் கொள்வது அவரை நினைத்துத்தான்..!

பத்திரிகைகளுக்கு பேட்டி. அனாவசியமாக அரட்டைகள் என்று எதற்கும் இடம் கொடுக்காமல் சுஜாதாவை அழைத்து வருவது.. கூட்டிச் செல்வதாக இருந்தவர் ஜெயகர். அவரை மீறி பத்திரிகையாளர்கள் நெருங்க முடியாமல் தவித்து பின்பு அதையே குற்றம்சாட்டி பத்திரிகைகளில் பகிரங்கமாக எழுதிய பின்புகூட சுஜாதாவே இதற்கு மறுப்பளிக்கக்கூட மறுத்துவிட்டார்.

மீறி சுஜாதாவைத் தேடி வீட்டிற்குச் சென்றவர்களைக்கூட ஜெயகரே வரவேற்று பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு “மேடம்.. இப்போ தூங்குறாங்க.. போன்ல பேசிட்டு வாங்க..” என்றோ, இல்லையெனில் ஏதாவது ஒரு பொய் சொல்லியோ வாசலிலேயே திருப்பியனுப்பிய கதை தமிழ்த் திரையுலகில் கி்ட்டத்தட்ட அத்தனை சினிமா பத்திரிகையாளர்களுக்கும் நேர்ந்திருக்கிறது..!

அப்படியிருந்தும் சிற்சில சமயங்களில் தேர்ந்தெடுத்த சில மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பேட்டியளித்திருந்த சுஜாதா தனது கணவர், குழந்தைகள் குடும்பம் பற்றி மட்டும் மூச்சுவிட்டதில்லை.

இறப்பில் அவருக்கு மாலை போடச் சென்ற சினிமா பிரபலங்கள் அவரது மகள் திவ்யாவை இத்தனை ஆண்டுகள் கழித்துதான் நேரில் பார்த்திருக்கிறார்கள். அத்தோடு கடந்தாண்டுதான் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறதாம். சஜீத் என்ற சுஜாதாவின் மகனையும் அன்றைக்குத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. மாலை போட்ட கையோடு பிரபலங்கள் திகைப்போடு திரும்பி வந்திருக்கிறார்கள்..!

உடல் நலக் குறைவால் மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டு கடந்த மாதத்தில் சுஜாதாவை பார்க்க விரும்பி நேரில் சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் வாசலில் இருக்கிறார் என்று தெரிந்து இறப்புக்கு முதல் நாள் எப்படியாவது பார்த்துவிடலாம் என்று கடும் முயற்சி செய்த சினிமாவின் மூத்த நிருபர்களுக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை..!

அவரது இறுதிக் காலத்திலாவது அவருடன் பணியாற்றியவர்களை பார்க்க அனுமதித்திருந்தால் அவர் கொஞ்சமாவது மனம் சந்தோஷப்பட்டிருப்பார் என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.. கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் என்ற நிலையில் 5 ஆண்டு காலமாக இருந்தவரை கடைசியில் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்பது கொடூரமான விஷயம்..!

அவருடைய இறப்பைக் கேள்விப்பட்டு வேகமாக விரைந்தோடிய சினிமா பத்திரிகையாளர்களுக்கு முதலிலேயே அனுமதி மறுக்கப்பட்டு, “வீட்டில் கரண்ட் இல்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்று பொய் சொல்லி வாசலிலேயே நிறுத்தியிருக்கிறார்கள்..! பின்பு ஒரு மணி நேரம் கழித்துதான் பத்திரிகையாளர்களையே அனுமதித்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்..! சுஜாதாவின் நெஞ்சார்ந்த அன்புக்கும், பண்புக்கும் முதல் பாத்திரமான சினிமா பத்திரிகையாளர்களின் நெஞ்சத்தை கீறியிருக்கிறது இந்தச் சம்பவம்.. ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை..!

ஒரு முறை டயலாக்கை வாசித்துக் காண்பித்துவிட்டாலே போதும்.. அதனை உள்வாங்கிக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன், மிகச் சரியான டைமிங்கில் கதாபாத்திரங்களை நோக்கி கை காட்டிப் பேசும் வித்தைக்காரரான சுஜாதாவுக்கு தனது திரையுலக வாழ்க்கையை தமிழ்த் திரையுலகத்தில் மிகச் சரியான விதத்தில் பதிந்துவைக்க முடியாமல் போனது நமது துரதிருஷ்டம்தான்..!

– உண்மைத் தமிழன்

இணையத்தில் இருந்து எடுத்தது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...