தமிழ்நாட்டில் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் தொடக்கம்..!
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று (மார்ச்.4) தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 4) தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வை 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித்தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் எழுதுகின்றனர். இதற்காக 3,302 தேர்வு மையங்க அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் பணியில் 46,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்வு மையங்களில், முறைகேடுகளை தடுக்க 4,334 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டுவர தடை உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது.
அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் விடைத்தாளுடன் சேர்த்துவழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிறரைபார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.