தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம்
தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டுக்கான மேடையெல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நாட்களில் மழை பெய்யும் என்பதால் மாநாடு நடைபெறுமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று (அக்.18) நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 பேரவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான அரசியல் பயிலரங்கம், மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் இன்று காலைமுதல் 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
“இதில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு, இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை, கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை, சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது, வெற்றிக் கொள்கைத் திருவிழா விளக்கவுரை, மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கவுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.