பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் பழைய ரயில் பாலத்தில் மையப் பகுதியில் அமைந்திருந்த ரயில் தூக்குப்பாலம் நூற்றாண்டைக் கடந்து உறுதித் தன்மை இழந்ததால் பழைய ரயில் பாலம் அருகே ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்ட இந்திய ரயில்வே திட்டமிட்டு கடந்த 2018ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் கடந்த 14ம் தேதி ட்ராலியில் சென்று பாலத்தை ஆய்வு செய்தாா். மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இணைப்புப் பகுதியை (கா்டா்) செங்குத்தாக ஏற்றி, இறக்கியும் அவர் ஆய்வு செய்தால். இதனுடன் அவர் பாலத்தின் அதிா்வுகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்த சூழலில், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்று (அக்.17) ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த பாலத்தில் 14 பெட்டிகளுடன் கூடிய ரயிலை 90 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனையின்போது மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை ரயில் இயக்கப்பட்டது. இந்த புதிய பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.