கரும்பு விவசாயி சின்னம்: நா த க கோரிக்கையை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

 கரும்பு விவசாயி சின்னம்: நா த க கோரிக்கையை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கர்நாடக கட்சிக்கு சின்னம் ஒதுக்கியதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம், தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சியினர் பரப்புரையை தொடங்கினர். ஆனால், திடீரென இந்திய தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கியது. இதையடுத்து, கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தல் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. தங்களது கட்சிக்கு 6% வாக்கு சதவீதம் உள்ளது. இருந்த போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லை என அக்கட்சியின் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேவேளையில், மக்களவை காலாவதியாவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு சின்னம் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதிலும் முன்பு நடைபெற்ற தேர்தல்களில் ஒரு கட்சி குறிப்பிட்ட சின்னத்தை பயன்படுத்தி வாக்குகள் பெற்றிருந்தால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை (First Come First Service)  என்ற அடிப்படையில், ஏற்கனவே பயன்படுத்திய கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் விதிமுறைகள் அடிப்படையில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், நாம் தமிழர் கட்சி பிப்ரவரி மாதமும் விண்ணப்பம் செய்திருந்தன. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஒரு கட்சிக்கு குறிப்பிட்ட எம்.பி.,-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் இருந்தால் தான் நிரந்தரமாக ஒரு சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்க முடியும் என்று தெரிவித்தார். அத்துடன், கரும்பு விவசாயி சின்னம் பொதுவான சின்னம் என்பதால், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு லக்கியான சின்னம் இல்லை போல என தெரிவித்த நீதிபதி, வேறு சின்னத்தை மாற்றலாமே என யோசனை வழங்கினார்.  இந்த விவகாரத்தில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...