மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடியை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் வரவேற்றார். பிரதமர் மோடியுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதனை அடுத்து பிரதமர் மோடி, மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தரிசனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து பொற்றாமரை குளம் ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, சாமி தரிசனம் செய்த பிரதமருக்கு மீனாட்சியம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனை அடுத்து, மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதிக்கு பிரதமர் மோடி சென்றார். பிரதமர் தங்கும் தனியார் விடுதி மலை பகுதி என்பதால் மலையை சுற்றி 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை காலை தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் புறப்பட்டு செல்ல உள்ளார்.