பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம்

 பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம்

இன்று:பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்).💫

⏳ தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன்.

⏳ இவர் படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

⏳ அவரிடம் நாம் கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்…

⏳👉🏻 வாசிப்பை நேசி!

அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார்.

⏳👉🏻 மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

⏳👉🏻 பிடித்ததில் பிணைந்திடு!

இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், ‘பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

⏳👉🏻 சிக்கனம் செய்!

அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

⏳🔬 உலகை உற்றுக் கவனி!

மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

⏳👉🏻 நம்பிக்கையோடு முன்னேறு!

இயற்பியலாளர்ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். ‘அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

⏳👉🏻 கற்றல் முடிவில்லாதது!

ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடுஇணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ”அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே” என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

⏳👉🏻 பகுத்து அறி!

”கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ”கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே” என்றார் ராமன்.

⏳👉🏻 ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

⏳👉🏻 உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!

”ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்” என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...