முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” வெளியிட்டார்!

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” வெளியிட்டார்!

தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”- வெளியிட்டார்.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும். இதன் பொருட்டு, பாலின வேறுபாட்டினை களைந்திடவும், பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திடவும், பெண்களின் நிலையினை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை தீட்டி, அவற்றை சீரிய முறையில் செயல்படுத்தி, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழச் செய்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் இம்மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், இக்கொள்கையினை ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகளிர் மேம்பாட்டிற்கென தனியான ஒரு கொள்கைய வெகுசில மாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில மகளிர் கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்

குறிக்கோள்கள்:

பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண்குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்தை குறைத்தல்.

வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல். ஆரோக்கியம் மற்றும்

வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.

அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்.

பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.

பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல்.

தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.

நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.

மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்

செயல்படுத்துதல்

அரசில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்பின் மூலம் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்த கொள்கையின் நோக்கத்தினை அடைய வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் இணைந்துள்ள பல்வேறு துறைகள், தங்கள் திட்டங்களை கொள்கையின் நோக்கங்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையானது ஒருங்கிணைக்கும் துறையாக இக்கொள்கை செயல்படுத்துதலை கண்காணிக்கும். சமூக நலத்துறை இயக்குநரக அலுவலகத்தில் ‘செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு அலகு அமைக்கப்படும்.

கண்காணித்தல்

தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமைக் குழு, தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும். இதேபோன்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையின் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளப்படும் சவால்களை சரிசெய்ய வேண்டும்.

இக்கொள்கை, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன், மகளிர் தங்களுக்குள் புதைந்துள்ள, இதுவரை கண்டறியாத சக்திகளை வெளிக்கொணர்ந்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நலத்துறை ஆணையர் வே. அமுதவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...