மரப்பாச்சி – 22 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 22
ப்ரியா கேட்டாள் “ஏம்மா நாம ட்யூஷன் போகாம திரும்பிட்டோம்?”
“உன்னை கொண்டு விட்டு கூட்டிட்டு வர சிரமமா இருக்குது அதனால உனக்கு வீட்டிலேயே ட்யூஷன் அரேஞ்ச் பண்ணப் போறேன்”
“இவர் நல்ல மாஸ்டர்மா”
மனதில் நினைத்தாள்.. ‘அவன் பாதகன் அது உனக்குத் தெரியாது’
“இல்லை ப்ரியா உனக்கு வீட்டுல தான் ட்யூஷன் இந்தப் பேச்சை விடு”
பிருந்தா சற்று கோபமாகக் கூறவும் அதற்கு மேல் ப்ரியா எதுவும் பேசவில்லை. ஆனால் தாயின் இந்தக் கோபம் அவளுக்கு புதியதாய் இருந்தது. பிருந்தாவை வீட்டில் விட்டு விட்டு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறிவிட்டு காளிராஜை வண்டியை டியூஷன் செண்டர் விடச் சொன்னாள் பிருந்தா. அரை மணி நேரப் பயணத்தில் ப்ரியா படிக்கும் வெல்டன் ட்யூஷன் செண்டரை அடைந்தாள். பிரதான சலையிலிருந்து ஒதுக்குப் புறமாய் அமைந்திருந்தது அந்த ட்யூஷன் செண்டர். காளிராஜை கீழே நிறுத்திவிட்டு மாடியேறினாள் மாடியில் இடது புறம் இருந்தது வெல்டன் ட்யூஷன் செண்டர். அவளை வரவேற்றான் முப்பது வயது மதிக்கத் தக்க அந்த கணேஷ். ஐந்தே முக்கால் அடி உயரம் அடர்த்தியான தலைக்கேசம் மாநிறம் என்று பெண்கள் திரும்பிப் பார்க்கும் வண்ணம் இருந்தான் அவன். வயது முப்பது மதிக்கலாம். பிருந்தாவைக் கேட்டான்..
“நீங்க”
“பிருந்தாவோட சித்தி..கொஞ்சம் பேசணும்” அவள் உள்ளம் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது.ஆனால் முகம் சிரித்துக் கொண்டிருந்தது.
“உள்ளே வாங்க புள்ளைங்க படிக்கிற சத்ததுல பேச முடியாது”
முன் ஹாலில் இருபது முப்பது பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். பெரிய ஹால் அது. அடுத்து அவன் கதவைத் திறந்தான் ஒரு பெட் ரூம் பாத் ரூம் கிச்சன் என்று இருந்தது.அவன் கூறினான்.
“நாங்க ரெண்டு வாத்தியார் சேர்ந்து இத நடத்துறோம். அவர் இன்னிக்கு வரலை” முன் ஹாலில் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை பார்த்து விட்டு உள்ளே வந்தவள் உள்ளம் பதறியது. இதில் ப்ரியா போல் எத்தனை குழந்தைகளை இவன் சிதைத்தானோ எத்தனை குழந்தைகளை சிதைக்கப் போகிறானோ? சீக்கிரம் இவனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் மனதினில் கறுவிக்கொண்டாள்.
பிருந்தா கேட்டாள்.. “நீங்க கல்யாணம் பன்ணிக்கலையா?”
“ஆண்கள் கேட்டால் இதுக்கு நான் சொல்லுற பதில் வேற வடிவத்துல இருக்கும்”
“பரவாயில்லை அதையே எங்கிட்டயும் சொல்லுங்க”
“ஒரு காஃபி குடிக்க யராவது காஃபி ஷாப்பை வாங்குவங்களா? இது தான் என் பதில்”
அவன் பதிலில் ஒளிந்திருக்கும் அர்த்தம் அவளுக்குப் புரியாமல் இல்லை. விதவிதமாய் பெண்களை நாசம் செய்ய நீ கல்யாணம் செய்து கொள்வதில்லை. மனதினுள் கூறிக் கொண்டாள்.சீக்கிரம் உனக்கு முடிவு கட்டுகிறேன் என்று..
“பை தி வே.. மிஸ்டர் கணேஷ் நான் வந்தது ப்ரியா இனி ட்யூஷன் வர மாட்டன்னு சொல்லிட்டுப் போகத்தான்”
கணேஷின் முகம் இருட்டில் விழுந்தது..
“ஏன் மேடம் ப்ரில்லியண்ட் ஸ்டூடண்ட் அவ ஏன் நிப்பாட்டுறீங்க?”
“வந்து போக கஷ்டமா இருக்குது அதனால வீட்டுல ட்யூஷன் ஏற்பாடு பன்ணிட்டோம். இதுவரை நீங்க அவளுக்கு நல்ல முறையில சொல்லிக் குடுத்ததுக்கு நன்றி. நாம டச்சுல இருப்போம் உங்க நம்பர் குடுங்க” என்றாள் பிருந்தா. அவன் தன் செல்போன் என்ணைக் கூறினான். அதை பதிந்து கொண்டு அவனிடம் விடை பெற்றாள் பிருந்தா. அவன் வீட்டுப் படி இறங்கியவள் மனதில் சபதமேற்றாள் கூடிய விரைவில் உன் கதையை முடிக்கிறேன் என்று.
சதா அதே நினைப்பிலே இருந்தாள் பிருந்தா எப்படி அந்தக் கயவனுக்கு தண்டனை கொடுப்பது. அவனைக் கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகலாம், ஆனால் ப்ரியா மீண்டும் தாயில்லா பிள்ளை ஆகிவிடுவாள்.வேறு மாதிரி இருக்க வேண்டும் தண்டனை. இண்டர் நெட்டை துழாவும் பொழுது அந்தச் செய்தி அவள் கண்களில் பட்டது. உடனே ராஜனுக்குப் போன் செய்து அதைப் பற்றிக் கூறினாள். அவன் ‘வெல்டன் பிருந்தா அதுக்குண்டானதை நான் செய்ய முயற்சிக்கிறேன்’ என்றான். அடேய் கணேஷ் குடி கெடுப்பவனே வர்றேண்டா உன் கதை முடிக்க என்று மனதில் கூறிக் கொண்டாள் பிருந்தா.!
(-தொடரும்…)
முந்தையபகுதி – 21 | அடுத்தபகுதி – 23