அனாமிகா – குறுநாவல் – 5 | திருமயம் பாண்டியன்
அத்தியாயம் – 5
மறுநாள் மாலை 6 மணி இருக்கும். இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு போன் வந்தது.
“சார்! நான் வக்கீல் கனகராஜ் பேசறேன்…”
“சொல்லுங்க கனகராஜ்…”
“நடிகை அனாமிகா கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி மாதவன் கோர்ட்டில் சரண்டராக விரும்பி எங்களை அணுகியிருக்கான் சார்…”
“இசிட்! என்ன சொல்றான் ?”
“தனக்கும், கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறான்…”
“எந்தக் குற்றவாளி உண்மைய ஒத்துக்கிட்டு இருக்கான்? அவனை எப்ப கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போறீங்க..?”
“கோர்ட் டைம் முடிஞ்சிடுச்சு சார். ஜட்ஜை வீட்டிலேயே பார்த்துடலாம்னு இருக்கோம்…”
“ஓ.கே. அவனை போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிக்க முடியுமா?”
“ஜட்ஜ்கிட்ட கேளுங்க சார்…”
“சரி…” போனை துண்டித்தார்.
சட்ட சம்பிரதாயங்களை நிறைவேற்றி மாதவனை போலீஸ் கஸ்டடியில் எடுக்க ஆயத்தமானார் ரவீந்திரன்.
“குற்றவாளியை துன்புறுத்தாமல் விசாரிக்கணும். போலீஸ் லாக்கப்புல அவரை அடிக்கவோ, அச்சுறுத்தவோ கூடாது…” என்ற கண்டிஷனோடு போலீஸ் விசாரணைக்கு அனுமதி தந்தார் நீதிபதி.
“சொல்லு மாதவ்… அனாமிகாவை எதற்காக கொலை பண்ணினே?”
“………..”
” மெளனம் சாதிக்காம சொல்லு. வீணா எங்களை லத்தி எடுக்கவிடாதே…”மிரட்டினார்.
“சார்! அனாமிகாவை நான் கொலை பண்ணலை. உங்க சந்தேகம் நியாயமற்றது…”
“அப்புறம் வேற யார் செய்தது?”
“அவளை நான் காதலிச்சது உண்மை. அவ சினிமாவுல நடிக்கறது பிடிக்கலைதான். அதுக்காக, கொலை பண்ற அளவுக்கு நான் மூர்க்கமானவன் இல்லை சார்…”
“பின்ன எதுக்காக அவளை சந்திக்க ஸ்டார் ஹோட்டல் போனே..?”
“சினிமால நடிக்கறதுக்கு முன்னால அவ எனக்கு சாதாரணமா தெரிஞ்சா. சினிமால நடிச்சதும் அனாமிகாவோட ஸ்டேட்டஸ் உயர்ந்துடுச்சு சார். அவளுக்காக நிறைய பேர் தவம் இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அஞ்சு கோடி சம்பாதிக்கிற அவ எங்கே? ஐம்பதாயிரம் மட்டுமே சம்பாதிக்கற நான் எங்கே? அவளுக்கு நான் பொருத்தமில்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். எனக்கும், அவளுக்கும் எட்டாத உயரமாயிடுச்சுன்னு அப்பவே மனசால விலக ஆரம்பிச்சேன். இருந்தும் அனாமிகா என்னை விடலை. தனக்கு பி.ஏ வா இருக்கச் சொன்னா. என் ஈகோ அதுக்கு இடைஞ்சலா இருந்துச்சு.
பல தொழிலதிபர்கள் அவளை ஆசை நாயகியாக வச்சுக்க ஆசைப்பட்டாங்க. சாதாரணமா அவளை சந்திக்க வர்ற தயாரிப்பாளருங்ககூட பத்து பவுன், இருபது பவுன்னு கோல்டு, டைமண்ட் வாங்கிட்டு வருவாங்க. அதையெல்லாம் பார்த்தபிறகு நாம அவ பக்கத்துல நிற்கக் கூட தகுதி இல்லாதவன்னு உணர்ந்துட்டேன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டேன் சார்!
அனாமிகாவும் சூட்டிங் பிஸியில என்கிட்ட ரொம்ப பேசறதில்ல. ஆனாலும், என்கூட டச்சில்தான் இருந்தா. நான் காதலை எல்லாம் மறந்துட்டு வெளிநாடு போய் செட்டிலாகிடலாம்னு முடிவு பண்ணினேன். ஏ டி ஏ என் கம்பெனி வேலையகூட ரிசைன் பண்ணினேன். ஆனா, நான் எதிர்பார்த்த மாதிரி பாரின் வேலை சுலபமா கிடைக்கல. ஓவர்சீஸ் மேன்பவர்ல பதிவு பண்ணி நல்ல வேலைக்காக காத்துக்கிட்டிருந்தேன். அங்கே நிறைய பணம் கேட்டாங்க.
எனக்கு உதவ அனாமிகாவை தவிர சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை. அவக்கிட்ட உதவி கேட்டேன். அவதான் எனக்கு அஞ்சு லட்சம் கொடுத்தா. அதை வாங்கத்தான் ஹோட்டலுக்கு போயிருந்தேன். கொஞ்ச நேரம் சாதாரணமா பேசிட்டு உடனே திரும்பிட்டேன். அந்த பணத்தை கட்டி விசாவுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். அடுத்த வாரம் ஜாப் ரெடியாகிடும். சிங்கப்பூர் போயிடுவேன் சார்…!” மாதவன் சொல்லச் சொல்ல ரவீந்திரன் தடுமாறினார்!
எல்லா கேள்விகளுக்கும் அவனிடம் சரியான பதில் இருந்தது. பொய் இல்லை. உண்மை பேசுகிறான் என்பதை உடல்மொழியும், கண்ணும், பேச்சும் காட்டிக்கொடுத்தன. வழக்கில் தனது யூகங்கள் எல்லாம் பொய்யாகிக்கொண்டிருப்பதை நினைத்து கலங்கினார்.
“எனக்கு தெரிந்த ஒரு உண்மையை சொல்லலாமா சார்?”
“சொல்லு…”
“அனாமிகாவுக்கும், நடிகர் அகிலுக்கும் ஒரு பிரச்சனை இருக்கு சார்…”
“என்ன பிரச்சனை?”
“அகில் இளம் நடிகன். வசீகரமானவன். ஜிம் பாடி. ஆனால், பெண்ணாசையை அடக்கத் தெரியாதவன். இதுவரைக்கும் தனக்கு ஜோடியாக நடித்த எந்த ஹீரோயினையும் அடையாமல் விட்டதில்லை. ஆனால், அனாமிகாவை மட்டும் அவனால் நெருங்க முடியவில்லை.
தேனிலவு சூட்டிங்கில் அனாமிகாவிடம் ஏதோ சில்மிஷம் செய்து, அவளிடம் செமத்தியாக அடி வாங்கியிருக்கிறான். சூட்டிங் ரத்தாகிவிட்டது. தயாரிப்பாளர் சமரசம் பேசி திரும்ப படம் ஆரம்பிக்க மூன்று மாதங்களாகிவிட்டது. ஆனாலும், அனாமிகாவிடம் பட்ட அவமானம் தாங்காமல் கொக்கரித்துக்கொண்டே இருந்திருக்கிறான். அவனால்கூட அவளுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் சார்! அவனையும் விசாரியுங்கள்…” மாதவன் சொன்னான்.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? அனாமிகா சொன்னாளா?”
“இல்லை. அவள் அந்த அளவு ஓப்பன் டைப் இல்லை. எதையும் அவளிடம் எளிதாக கேட்டு தெரிந்துகொள்ள முடியாது. C சினிமா பத்திரிகையில் படித்து தெரிந்துகொண்டேன் ..” சொன்னான்.
****
அகிலை விசாரிக்க வந்தார் இன்ஸ்பெக்டர்.
அரண்மனை போல அகில் வீடு பிரமாண்டமாய் இருந்தது. கொஞ்ச படங்களில் நடித்து அதிக வருமானம் பெற்றதன் சாட்சியமாய் வீடு அலங்காரம் பெற்றிருந்தது. அகிலின் ஆளுயர படமொன்று கம்பீரமாய் வீட்டின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
வீட்டிலிருந்த ஜிம்மிலிருந்து வெளியே வந்தவனின் கைகள் புடைப்பேறி, நெஞ்சு விம்மியிருந்தது. வியர்வை வழிந்த முகத்தை டவலால் துடைத்துக்கொண்டான். புரொட்டீன் பானம் பருகினான்.
அகிலின் உடம்பைப் பார்த்ததும் அவருக்கே ஆசை வந்தது. ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து எத்தனை நாளாகிவிட்டது…? பெஞ்ச் பிரஸ், ஸ்குவாட், டெட்லிஃப்ட் போட்டு உடம்பு ஏற்றியதெல்லாம் ஞாபகம்வந்து அவரை படுத்தியது.
மனதை திடப்படுத்தி நிதானதுக்கு வந்தார்.
விசாரணையை ஆரம்பித்தார்.
“அனாமிகா கொலை விஷயமா விசாரிக்க வந்திருக்கேன் அகில். நீங்கள் தேனிலவு ஷூட்டிங்கில் அனாமிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அனாமிகா உங்களை கன்னத்தில் அறைந்து ஷூட்டிங் கேன்சல் ஆனதாகவும் சொல்கிறார்களே, உண்மையா?”
“உண்மைதான் சார்! ஆனால், அனாமிகாவும், நானும் அந்த படத்திற்கான கால்ஷீட்டை தள்ளிப்போடவே அப்படி நாடகமாடினோம். அந்த நேரத்தில் இருவரும் தனித்தனியாக வேறொரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கவே அந்த நாடகம் போட்டோம். அது யாருக்கும் தெரியாது. வெளியே நாங்கள் பகையாளிபோல நடித்துக்கொண்டிருந்தோம். உண்மையில் அனாமிகா என்னைக் காதலித்தாள்.நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் இருந்தோம்…” சொன்னான்.
“எப்படி நம்புவது?” ஆச்சரியம் தாளாமல் கேட்டார்.
“நானும், அவளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபிகள், உதடு கவ்வி முத்தமிட்டுக்கொண்ட போட்டோக்கள்..காதல் சொட்ட நாங்கள் பேசிக்கொண்ட பேச்சுகள் இவையெல்லாம் வாய்ஸ் ரெக்கார்டாக இருக்கிறது. கேளுங்கள்…” செல்போனை கொடுத்தான்.
கேட்டார். பார்த்தார். அவன் சொன்னதெல்லாம் உண்மையாக இருந்தது.
விசாரணையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.அப்போது ரவீந்திரனுக்கு, சப்-இன்ஸ்பெக்டர் கோகுலிடமிருந்து போன் வந்தது. ஆன் செய்து காதுக்கு கொடுத்தார்.
“சொல்லு கோகுல்…”
“சார்! அனாமிகாவோட வீடியோ ஒன்னு சமூக வலைதளங்களில் வைரலா பரவுது…”
“என்ன வீடியோ அது…?”
“அனாமிகா நியூடா குளிக்கற வீடியோ…”
“உடனே எனக்கு அதை அனுப்பு கோகுல்…”
“சார்… அதெல்லாம் நீங்க பார்க்க வேணாம்…”
“யோவ்! நான் என்ன சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேனா? இல்லை அனுமன் பக்தனா? அவள பக்கத்துல இருந்து பிரேதமாவே பார்த்தாச்சு. படத்தை அனுப்புய்யா. கேஸ்ல துப்பு துலக்க ஏதாவது ஐடியா கிடைக்கும்…” ரவீந்திரன் கோபமாகச் சொன்னார்.
உடனே அந்த போட்டோவை அனுப்பி வைத்தார் கோகுல்.
படத்தை பார்த்தார் ரவீந்திரன்.
அதில் அனாமிகா பாத்ரூம் உள்ளே நுழைவதும், பிறகு ஒவ்வொரு உடையாய் களைந்து போடுவதும் கூந்தலை விரித்துப்போட்டு ஷவரில் ஆனந்தமாய் நனைந்து குளிப்பதும் தெளிவாக தெரிந்தது. தன்னிடமுள்ள அழகையெல்லாம் தெளிவாய் அள்ளி அள்ளி வீடியோவில் தந்திருந்தாள்.
ஏதோ யோசனைபட்டவராய் கோகுலுக்கு போன் போட்டார்.
இணைப்பு கிடைத்ததும், “கோகுல்! நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ…” என தனியாக போய் சில விஷயங்களை கோகுலிடம் சொன்னார்.
மறுநாள்-
கோகுல் அவளை ரவீந்திரன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்!
போலீஸ் அடியில் உதடுகள் கிழிந்து வாயிலிருந்து ரத்தம் சொட்ட உட்கார்ந்திருந்தாள் வத்ஸலா!
“கொலையாளியை தூரத்தில் வேற எங்கெல்லாமோ நாங்க தேட, ரொம்ப பக்கத்துல நின்ன உன்னை கவனிக்கத் தவறிட்டோம்…சொல்லு! எதுக்காக அனாமிகாவை கொலை பண்ணினே..?”
“ஐயா! நடந்ததையெல்லாம் சொல்லிடறேன். என்னை அடிக்காதீங்க…” கெஞ்சினாள்.
“சொல்லுடி…” மறுபடி லத்திய ஓங்கினாள் லேடிகான்ஸ்டபிள்.
“பொறுங்க…” கை அமர்த்தினார் ரவீந்திரன்.
“நடிகர் அகிலால தனக்கு பாலியல் தொல்லை இருப்பதாகவும், அவளை சமாளிக்க தனக்கு பாதுகாப்பாக வந்து இருக்கும்படியும் என்னை அனாமிகா அழைத்தாள். நான் போயிருந்தேன்…
அங்கே போனதும், ‘ அப்பாவுடன் சண்டை போட்டுக்கிட்டு இப்படி தனியா வந்து இருக்கறதாலதானே இவ்வளவு பிரச்சினையும். நீங்க வீட்டுக்கு வந்திடுங்க..’ன்னு சொன்னேன்.
“நல்ல அட்வைஸ்தான். ஆன்மிகா கேட்கலையா?”
“ஆமா. ஆனா, அவ வேறொரு யோசனையில இருந்தா…”
” என்னது?”
“சமீபகாலமா அவ படவாய்ப்பு குறையத் தொடங்கிருச்சு. சரிந்த மார்க்கெட்டை மறுபடி சூடு பிடிக்க வைக்க, அவ நிர்வாணமா குளியல் போட்டு அதை ஷூட் பண்ணி வெளியே கசிய விட போறதா சொன்னா. நான் அதெல்லாம் அசிங்கம்னு எடுத்துச் சொன்னேன். கேட்கல… என் முன்னாலயே கேமரா பிக்ஸ் பண்ணிட்டு, குளிக்க ஆரம்பிச்சா. ஒரு தமிழ்பெண் நம் கலாச்சாரத்தை சீரழிக்கிறதோட மட்டுமில்லாம, குடும்ப மானத்தையும் வாங்கறாளேன்னு ஒரு ஆத்திரம். அதுல ஆவேசமாகி அவ கழுத்தை நெரித்து….” விசும்பினாள்.
“கதை நல்லா இருக்கு.ஆனா, நீங்க இன்னும் உண்மையச் சொல்லலை…” இன்ஸ்பெக்டர் சொல்ல நிமிர்ந்தாள்.
“என்ன சொல்றீங்க? இதுதான் உண்மை…” என்றாள்.
“இல்லை. உண்மை வேற வத்ஸலா! நான் சொல்லட்டுமா….கேட்டு தலையாட்டினா போதும்.
“………….”
” நீ வத்ஸலாவே இல்ல. இறந்ததுதான் வத்ஸலா. நீ அனாமிகா!”
“எப்படிச் சொல்றீங்க?”
“சொல்றேன். என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாச்சு. பிரேதத்தை தோண்டி எடுத்து மறுபடி போஸ்ட்மார்டம் பண்ணியாச்சு…”
“இல்ல! நீங்க சொல்றதெல்லாம் பொய்…”
” முழுசா கேளு அனாமிகா! இன்னும் நான் பேசி முடிக்கல. உனக்கு மார்க்கெட் நல்லா இருக்குன்னு நம்பி மூவாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் சொந்தப்படம் எடுத்தே. அது மிகப்பெரிய தோல்வி. கடனாச்சு. அசல், வட்டி கட்ட முடியல. பைனான்சியர்கள் நெருக்க ஆரம்பிச்சாங்க. அவங்கக்கிட்ட இருந்து தப்பிக்கதான் இந்த கொலை இல்லையா?
நடிப்புக்கு முழுக்கு போட்டுட்டு, லைஃப் இன்சூரன்ஸ்ல வர்ற பணம், அப்பா சொத்து இதுபோதும். இப்படியே மிச்ச காலத்தை வாழ்ந்து முடிச்சிடலாம்னு முடிவு பண்ணி, இந்த பிளானை எக்ஸ்க்யூட் பண்ணியிருக்கே…”
ரவீந்திரன் சொல்வதை கோகுலும் ஆச்சரியமாகக் கேட்டார்.
“இதுல எனக்கு புரியாம இருந்தது… உன் உருவத்தை வத்ஸலாவுக்கு எப்படி மாத்தினே ? அவ உருவத்தை எப்படி நீ எடுத்துக்கிட்டேன்கறதுதான்… அதுக்கும் விடை கிடைச்சாச்சு.
இதுக்காக நீ பயன்படுத்தியிருக்கிறது ஹைடெக்கான நவீன விஞ்ஞானம். உன் முகத்தை பிரதி எடுத்து அப்படியே வத்ஸலா முகத்துல ஒட்டுறது. அவ முகத்தை பிரதி எடுத்து உன் முகத்துல ஒட்டுறது. அப்படியே அச்சு அசலா.. கலர், மச்சம் எல்லாம் ஒரிஜினலா பிரதி எடுக்க முடியும். 70 டி டைமென்ஷன். ரொம்ப காஸ்ட்லி. பத்து வருஷத்துக்கு சோப்பு, தண்ணி எதுனாலயும் கலையாது. பின்விளைவு இல்லை. தேவைப்பட்டா மறுபடி போட்டுக்கலாம்.எத்தனை முகம் வேணாலும் மாத்திக்கலாம். வித்தியாசமே தெரியாது. மைக்ரோ மில்லிமீட்டர் அளவு தின்லேயர். அப்படியே முகத்தோட ஒட்டிடும். ஹாலிவுட்டுல சினிமா ஆர்டிஸ்ட் மேக்கப்புக்காக இதை பரிசோதிச்சுக்கிட்டு இருக்காங்க.
உன்னோட மூவாயிரம் கோடி ரூபா பட்ஜெட் படத்துக்கு நீ ஒப்பந்தம் போட்ட அமெரிக்க நிறுவனம்தான் உனக்கு இதை செஞ்சுக்கொடுத்திருக்கு.
இவ்வளவு செஞ்ச நீ எங்கே கோட்டைவிட்டே தெரியுமா? சொல்லவா…?”
அனாமிகா நிமிர்ந்து பார்த்தாள்!
“என்னதான் முகத்தை பிரதியெடுத்து ஒட்டி நீ மாறினாலும், உன் மனசை மாத்த முடியல. உனக்கு பிடிச்ச டிரஸ்தான் போட்டுக்கிட்டே. உனக்கு பிடிச்ச சென்ட்தான் யூஸ் பண்ணினே. முதல்முறையா உன் வீட்டுக்கு என்கொயரி வந்தபோதே அது யோசிக்க வச்சது. ஒரு வேலைக்காரிய போல இல்லாம, ஒரு எஜமானிய போலவே நடந்துக்கிட்டே. உன் வித்தியாசம் நெருடலா இருந்துச்சு.
நீ குளிச்சு பணத்துக்காக வெளியிட்ட வீடியோதான் உனக்கு எமன்! உன் நெஞ்சிலே ஒரு மச்சம். தொடையிலே ஒரு மச்சம் இரண்டும் வத்ஸலாவுக்கு கிடையாது. வத்ஸலா சின்ன வயசு போட்டோவுல இருந்து தற்போதைய போட்டோவரை பார்த்தாச்சு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுலயும் மச்சம் இல்லை. ஆனா, வத்ஸலா முகத்தில இருக்கிற உனக்கு அனாமிகாவோட மச்சம் எப்படின்னு யோசிச்சேன்…
வத்ஸலா எப்பவும் ஆஃப் டிரவுசர், டீசர்ட் போடுற ஆள் கிடையாது. ஆனா, உனக்கு அதுதான் விருப்பம். அதனால உன் மச்சத்தை ஈஸியா என்னால பார்க்க முடிஞ்சது. லோ-கட் டீசர்ட்டில், உன் நெஞ்சு மச்சமும் அப்பட்டமா தெரிஞ்சது. முகத்தை மட்டும் பிரதியெடுத்து மாத்திட்டே. ஆனா மற்றதெல்லாம் மாத்த முடியல. மாட்டிகிட்டே.!
அகிலால் தொந்தரவு பாதுகாப்புக்கு வா என வத்ஸலாவை வரச் சொல்லி, அவளை கொன்று உன் முகப் பிரதியை அவளுக்கு மாட்டி, அவள் பிரதியை உனக்கு எடுத்துக்கொண்டு உடனே வெளியேறி விட்டாய்…”
“நீரூபிக்க முடியுமா?”
“நிரூபிக்கட்டுமா? கேட்டவர், பஞ்சில் ஏதோ திரவம் எடுத்து வந்து, அனாமிகா முகத்தில் தொட்டு தொட்டு அழிக்க உண்மையான அனாமிகாவின் முகம் வெளியே தெரிந்தது!
கண்ணாடி காட்டினார்.மிரண்டாள்.
“பாவம் வத்ஸலா! எதுக்காக கொன்னே…?” கேட்டார்.
“எல்லாம் கண்டுபிடிச்சாச்சா சொல்றேன்…” என்றாள்.
“வீட்டில் அப்பாவுக்கு அவதான் செல்ல பொண்ணு. சொத்தை அவ பேருக்கு அப்பா எழுதப்போயிட்டார். அப்பாவோட ரகசிய மனைவிக்கு பிறந்த பொண்ணுதான் வத்ஸலான்னு எனக்கு அப்புறமாதான் தெரிஞ்சது. அப்பாவை கேட்டேன். மழுப்பினார்… அதனால எனக்கு கோபம் அதிகமாச்சு. என் கடன் பிரச்சனைக்கும், வீட்டு பிரச்சனைக்கும் வத்ஸலாவை தீர்த்துக் கட்டறதுதான் சரின்னு….”
அழுதாள்!
கமிஷனர் வந்தார். கங்கிராட்ஸ் சொன்னார். ஆதாரங்களை அடுக்கி கோர்ட்டில் நிறுத்தி, தண்டனையும் பெற்றுக்கொடுத்து அனாமிகாவை சிறைக்கு அழைத்துப்போகயில், அகில் வந்தான். அழுதான். “கவலைப்படாம போ. ஜாமீன்ல எடுக்கறேன்…” என்றான், தன் புது காதலியின் தோளிலிருந்து கையை எடுக்காமலயே!
(-முற்றும்)
முந்தையபகுதி – 4