ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்றார்..!

 ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்றார்..!

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஜன.4-ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.  மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவரது இந்த செயல்பாடு ஆந்திர அரசியலில் கவனம் பெற்றது.

இதனிடையே, ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை  ஜன.15 ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், “ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி அரசுகள் ஆந்திரத்தை சுமார் ரூ.10 லட்சம் கோடி கடனில் தள்ளிவிடப்பட்டன. தற்போதைய அரசிடம் சாலைகள் போடவோ அல்லது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ நிதி இல்லை.

ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்கட்சியாக இருந்த வரை மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடினார். ஆனால், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அதை செய்யவில்லை. ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததற்கு ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகள் தான் காரணம். இவ்விரண்டு கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் பாஜகவுக்கான வாக்காக இருக்கும்” என கூறினார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...