திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா..!

 திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா..!

பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில்
ஆண்டுதோறும் மூன்று தேர் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருகோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனும் சித்திரைத் தேரோட்டம், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனும் தைத் தேரோட்டம், பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிர்மா திருநாள் எனும் கோரதம் ஆகிய மூன்று திருவிழாக்களில் நம்பெருமாள் தங்கக் கருடவாகனத்தில் எழுந்தருள்வார். இதில் சித்திரை மாத தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இதேபோல, மாசி மாதத்தில் நடைபெறும் திருப்பள்ளியோடத்திருநாள் எனும் தெப்பத்திருவிழாவின் போது மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுவார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட திருவிழா  ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் நாள்தோறும் நம்பெருமாள் கருடவாகனம், யாளிவாகளம், யானை வாகனம், தங்ககுதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்சவாகனம் என  பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று  வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவிந்தா…ரங்கா…ரங்கா… என்கிற கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கிழக்குச் சித்திரை வீதிகளில் புறப்பட்டு, தெற்கு சித்திரை வீதி வழியாக மேற்கு சித்திரை வீதியை அடைந்த திருத்தேர், வடக்குவீதி வழியாக நுழைந்து பின்னர் மீண்டும் கிழக்கு சித்திரை வீதியில் உள்ள நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதையடுத்து, மே 8-ம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...