போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு! | சதீஸ்

 போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு! | சதீஸ்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு,  பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து,  நேற்று முதல் (ஜனவரி 9)  அண்ணா தொழிற்சங்கம்,  சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  அந்த மனுவில்,  8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்,  பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  பொது மக்களின்  போக்குவரத்திற்கும்,  பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சுமூகமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில், போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்த வழக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.  பொங்கல் காலங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட கூடாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

தமிழக அரசு மிகபெரிய நிதி நெருக்கடியில் உள்ளது.  பொருளாதார நெருக்கடி காரணமாகவே தற்போது கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.  7000 தொழிலாளர்களின் நலனை விட தற்போது பொதுமக்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது.

அமைதியாக நடந்த வேலைநிறுத்த போராட்டம்,  வன்முறையை நோக்கி சென்று கொண்டுள்ளது.  இவ்வாறு வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து,  போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து ஜன.19-ஆம் தேதி நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்திருந்தது.  அதன்படி,  இப்பேச்சுவார்த்தை இன்று (ஜன.19) அம்பத்தூர் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இன்று முற்பகல் 12 மணிக்குத் தொடங்கியது.

இந்தப் பேச்சுவார்த்தையில்,  தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள்,  போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்கள்,  போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.  அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி,  அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...