விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு – பிரதமர் மோடி | சதீஸ்
விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என்று சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு தொடக்கப் போட்டியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று (19.01.2024) மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது விழாவில் பிரதமர் மோடிக்கு வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ஆளுநர், மத்திய அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இன்று கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. பிரதமர் விழாவை தொடக்கி வைக்க, விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மத்திய இணையமைச்சா் நிஷித் பிராம்னிக், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
வணக்கம் சென்னை எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, 2024ம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் என்றார். முன்னதாக, அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும் என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டினார்.